கோட்டாபய ஆயுதங்களை தூக்காமல் பொறுமை காத்தது ஏன்..! காலம் கடந்து வெளிவரும் தகவல்
அரசாங்கம் வீழ்ச்சியடைந்தாலும் நாடு சீர் குலைவதற்கு அனுமதிக்க முடியாது என்பதாலேயே, 69 இலட்சம் மக்களின் ஆணை இருந்தும் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தோட்டாக்கள், ஆயுதங்களால் போராட்டத்தை ஒடுக்கவில்லையென சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அமைப்பாளரும், ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் கடந்த (30) ஆம் திகதி தங்காலை நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
ஆட்சி கவிழ்ந்தால் அதிலிருந்து மீள்வது மிகவும் கடினம்
ஒரு அரசாங்கம் கவிழ்ந்தால் அதனை மீட்டுவிடலாம், ஆனால் ஆட்சி கவிழ்ந்தால் அதிலிருந்து மீள்வது மிகவும் கடினம். அதனால்தான், கோட்டாபய ராஜபக்ச போராட்டத்தை ஆயுதங்களால் அடக்கவில்லை.
துரதிர்ஷ்டவசமாக, 2015க்குப் பிறகு நியமிக்கப்பட்ட பல அரசாங்கங்கள் நாட்டின் வளர்ச்சி இலக்குகளை அடையத் தவறிவிட்டன. பின்னர் மீண்டும் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அரசாங்கத்தை ஆரம்பித்தோம், ஆனால் அது பல்வேறு சதிகாரர்களால் அழிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
நெல் சேமித்து வைக்க விமான நிலையத்தை அமைக்கவில்லை
அண்மையில், மத்தள விமான நிலையம் தனிமைப்படுத்தப்பட்ட போது நாம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். சிறை சென்றோம். அதற்காக இப்போதும் மத்தள விமான நிலையத்தை தனியார் மயமாக்குவது பற்றி மீண்டும் கலந்துரையாடி வருகின்றோம். நாம் விமான நிலையத்தை அமைத்தமை நெல்லை சேமித்து வைப்பதற்காக அல்ல.
இதேபோன்று துறைமுகம் அமைக்கப்பட்டமை தங்களுடைய சொந்த உடைமை மாற்றத்திற்காக அல்ல. அதிவேக நெடுஞ்சாலை உணவை கொண்டு செல்வதற்காக அமைக்கப்படவில்லை.
முகப்புத்தகத்தில் படங்களை போடுவதற்காக நாங்கள் தாமரை கோபுரத்தை அமைக்கவில்லை. நாட்டின் அபிவிருத்தியை முன்நிலைப்படுத்தியே எமது அரசாங்கத்தின் கீழ் இவற்றை ஆரம்பித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |