விரட்டியடிக்கப்பட்ட கோட்டாபயவின் பெயரில் முல்லை மண்ணில் இராணுவ முகாம் எதற்கு!
வடக்கு கிழக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டங்கள் என்றால் திருகோணமலை மாவட்டமும், முல்லைத்தீவு மாவட்டமும் தான்.
அப்படி முக்கியம்வாய்ந்த மாவட்டங்கள் தமிழர்களுடைய கைகளிலே மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிமுக பரப்புரைக் கூட்டம் நேற்று முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு தமிழர் கைகளில் வேண்டும்

இந்த பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“மக்களால் விரட்டியடிக்கப்பட்ட கோட்டாபயவின் பெயரில் படை முகாம் எதற்கு. வீதியின் இரண்டு பக்கங்களிலும் இராணுவ முகாம்களைத்தான் பார்க்க வேண்டியுள்ளது. மக்களை காணமுடியாத ஒரு நிலை காணப்படுகின்றது.
எமது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளான இணைந்த வட,கிழக்கென்பது நிச்சயமாக சாத்தியமாகும். அப்படி சாத்தியமாக வேண்டுமாக இருந்தால் திருகோணமலை மாவட்டமும், முல்லைத்தீவு மாவட்டமும் தமிழர்களின் கைகளில் இருக்க வேண்டும்.
அதிகரித்துள்ள இராணுவ முகாம்கள்

நடைபெறவுள்ள இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலானது தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமானதொரு தேர்தல். நாங்கள் வீதி வீதியாக இறங்கி இராணுவமே வெளியேறு என கோசங்களை எழுப்புகின்றோம்.
அதேபோன்று இதனை நாடாளுமன்றத்திலும் சொல்லும் ஒரே ஒரு கட்சி தமிழரசு கட்சி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 14 ஆசனங்களிலிருந்து 10 ஆசனங்களுக்கு வாக்கு சரிவு வந்திருக்கின்ற காரணத்தினால், வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் இராணுவமே வெளியேறு என வீதியிலே சொன்னாலும் கூட, இது தமிழ் தேசிய கட்சிகளின் அரசியல்வாதிகள் தங்களுடைய தேர்தல் பரப்புரைக்காக சொல்லுகின்ற கோசமே தவிர இது மக்களுடைய அபிலாசை இல்லை என்ற சந்தேகம் சில வேளைகளில் ஏற்படுவதனை அவதானிக்க முடிகின்றது.
வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவு

எங்களுக்கான வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ள காரணத்தினால் சர்வதேசத்துடன் பேசும் போது எங்களுடைய பலம் குறைந்துள்ளதையே காணக்கூடியதாக இருகின்றது.
இதன் காரணமாகவே நாம் சொல்கின்றோம் மக்கள் வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இந்த சின்னம் தலைவர் காட்டிய சின்னம், உலக நாடுகளுக்கு நன்கு தெரிந்த சின்னம். ஆகவே மக்கள் இந்த சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.