கர்தினாலின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த கோட்டாபய
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்வைத்த குற்றச்சாட்டுக்களை தான் நிராகரிப்பதாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளையும் சட்ட நடவடிக்கைகளையும் அரசியல்வாதிகளால் மாத்திரம் முன்னெடுக்க முடியாதெனவும், காவல்துறையினரும் குறித்த செயல்பாட்டில் பாரிய பங்கு இருப்பதாகவும் கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஐந்தாவது ஆண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை நினைவு கூரப்பட்டது.
குற்றச்சாட்டுக்கள்
இதன் போது, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மீது கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நான்கு முக்கிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
இதன்படி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கை அப்போதைய அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து, அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும் குற்றவாளிகளாக பெயரிடப்பட்டவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கர்தினால் மெல்கம் ரஞ்சித் குறிப்பிட்டார்.
இந்த தாக்குதல் தொடர்பான அறிக்கையின் முதல் பாகத்தை வழங்குவதில் தாமதங்கள் ஏற்பட்டதாகவும் ஏனைய பாகங்கள் வழங்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
நிராகரித்த கோட்டாபய
அத்துடன், அதிபர் ஆணைக்குழு உள்ளிட்ட ஆணைக்குழுக்களால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளின் சில பரிந்துரைகளை மாத்திரம் நடைமுறைப்படுத்துவதற்காக ஆறு உறுப்பினர்கள் கொண்ட உப அமைச்சரவை குழுவொன்றை கோட்டாபய ராஜபக்ச நியமித்திருந்ததாகவும், இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளை அவர் இடமாற்றம் செய்திருந்ததாகவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், கொழும்பு பேராயரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |