கோட்டாபய - மகிந்த காரணம் இல்லையென்றால் யார் பொறுப்பு! எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு பொதுஜன பெரமுன கட்சியோ அல்லது அரசாங்கமோ காரணமல்ல என்றால் யார்தான் காரணமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் டொலர் நெருக்கடிக்கு அரச தலைவரும் பிரதமரும் காரணம் இல்லையென்றால் ஐக்கிய மக்கள் சக்தியும் சஜித் பிரேமதாசவுமா காரணம் என்றும் அவர் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
காலி - கல்பொக்க - கொஸ்கொடவில் அமைந்துள்ள ஆமைகள் பாதுகாப்பு நிலையத்திற்கு சென்றிருந்த அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,
இளைஞர் யுவதிகள் நாட்டை விட்டு வெளியேறுவதும், நாட்டில் தொழிற்சாலைகள் மூடப்படுவதும், நாடு இவ்வளவு பேரழிவிற்குள் விழுந்திருப்பதற்கு அரசாங்கத்தின் தவறு இல்லையென்றால், இதற்கு காரணம்?
இந்த நாட்டு மக்களை யார் என அரசாங்கம் நினைத்துக் கொண்டிருக்கிறது? நாடு முழுவதும் ஒவ்வொன்றிற்கும் வரிசைகள் உள்ளன என்பதோடு, மக்களை வாட்டும் இந்த துன்பங்களுக்கு மக்கள் வாக்குச் சாவடிகளில் பதில் சொல்வார்கள்.
ஒரு நாட்டை ஆளத் தேவையான அனைத்து அதிகாரங்களையும்,தேவையான ஒவ்வொரு பதவியையும் இந்த நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளதாகவும், இவ்வாறான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் இந்த நாட்டை கட்டியெழுப்பவோ அபிவிருத்தி செய்யவோ தற்போதைய அரசாங்கத்திற்கு எந்த திறமையும் இல்லை.
இன்று நாடு முழுவதும் வரிசைகள் காணப்படுவதாகவும், இந்த அனர்த்தத்தில் இருந்து மீள்வதற்கான சாத்தியமும் திட்டமும் உள்ளதா என சிலர் கேட்கின்றனர்.
நிலைபேறான ஒழுங்கமைக்கப்பட்ட வேலைத்திட்டமும் அதற்கான திறனும் ஐக்கிய மக்கள் சக்தியிடம் உள்ளது. பல்வேறு பேரணிகளில் சிக்கிக் கொள்ளாமல், மீண்டும் 2019ஆம் ஆண்டு பரீட்சாத்த பரிசோதனையை செய்ய வேண்டாம்.
எக்ஸ்பிரஸ் பேர்ல் அனர்த்தம் காரணமாக நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டினை துல்லியமான மதிப்பீடு செய்து, அதனை பொற்றுக்கொள்வதற்கு தற்போதைய அரசாங்கத்தினால் இன்னும் முடியவில்லை. இது தொடர்பில் சரியான பகுப்பாய்வை மேற்கொள்ளும் திறன் கூட அரசாங்கத்தின் பல அமைச்சர்களுக்கும் இல்லை.
எக்ஸ்பிரஸ் பேர்ல் துயரச் சம்பவத்தை இன்று பலர் மறந்து விட்டனரா? இந்த அவலத்தால் நாட்டின் மீன் வளம் சார்ந்த இழப்பு குறித்து, நாட்டில் அழிந்துள்ள இயற்கை வளங்கள் குறித்தும் அரசாங்கம் எவ்விதத்திலும் பொருட்படுத்தவே இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.







