கோட்டாபயவுடன் சந்திப்பு!! மறுப்பு தெரிவித்த பிரதிநிதிகள்
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை கோட்டா கோ கம ஆர்ப்பாட்டத்தின் பிரதிநிதிகள் மறுத்துள்ளனர்.
காலி முகத்திடலில் உள்ள பிரதிநிதிகள் நேற்று அரச தலைவரை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கோட்டா கோ கம பிரதிநிதிகள், எவரும் அரச தலைவரை சந்திக்கவில்லை என தெளிவுபடுத்தினர்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கை என தெரிவித்த செயற்பாட்டாளர் ரந்திமல் கமகே, இவை காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சி என தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழில் வல்லுநர்கள் மற்றும் இளைஞர்கள் அடங்கிய குழுவொன்று நேற்று அரச தலைவரை சந்தித்ததாக அரச தலைவர் அலுவலகம் கூறியதை அடுத்து இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அரச தலைவர் ஊடகப் பிரிவின் அறிக்கை!
தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய சுருக்கமான யோசனைகளை குறித்த குழு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சஷவிடம் முன்வைத்துள்ளதாக அரச தலைவர் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இந்த யோசனை நேற்று (01) கொழும்பில் உள்ள அரச தலைவர் மாளிகையில் வைத்து அரச தலைவரிடம் கையளிக்கப்பட்டதாக அரச தலைவர் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டது.
இந்நிலையில், அவ்வாறான சந்திப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என கோட்டா கோ கம ஆர்ப்பாட்டத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
