கைது செய்யப்படுவதை தடுக்க கோரி கோட்டாபய மனு - இன்று விசாரணை
தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்துள்ள மனு தொடர்பான மேலதிக விசாரணை இன்று (24) இடம்பெறவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விசாரணை தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தானை மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவானது கடந்த ஜூன் 18 ஆம் திகதி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வாக்குமூலம் பதிவோ செய்யவில்லை
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி இந்த விசாரணைகள் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு விசாரணை நிறுவனமும் தன்னிடம் விசாரணையோ அல்லது வாக்குமூலம் பதிவோ செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகளுக்கு அமைய எந்த சந்தர்ப்பத்திலும் வாக்குமூலம் வழங்குவதற்கு தாம் விருப்பத்துடன் இருப்பதாக அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையில், எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி, பிரதிவாதிகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக வெளிநாட்டுப் பயணத் தடையைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், எவ்வித அடிப்படையும் இன்றி விசாரணைகளை முன்னெடுத்து பிரதிவாதிகளின் சுதந்திரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குற்றம் சாட்டினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |