பொய்களை பரப்பும் கோட்டாபய: கடுமையாக சாடும் மனோகணேசன்
“வயிற்றில் விழுந்த அடியால் தெருவுக்கு வந்த சிங்கள மக்களே அரகலவை நடத்தினார்கள். பொய் சொல்ல வேண்டாம் கோட்டாபய நீர் புத்தகம் எழுதி இருக்கவே தேவை இல்லை ”என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச எழுதியுள்ள “சதி” என்ற நூல் தொடர்பில் தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளதிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “சிங்கள பெளத்தர் பலமடைவது சிறுபான்மையினருக்கு தீங்கு விளைவிக்கும் என்பதாலேயே தனக்கு எதிரான உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் ஒன்று திரண்டு அரகலவை நடத்தினார்கள்” என தன் நூலில் கூறும் கோட்டாபய ராஜபக்ச, வரலாற்று குற்றங்களில் இருந்து இன்னமும் கூட பாடம் படிக்காத ஒரு அறிவிலி.
பொய் சொல்ல வேண்டாம்
சிங்கள-பெளத்தர் பலமடைவது இந்நாட்டு தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஒரு பிரச்சினை அல்ல. சிங்கள மொழி பேசுவதன் மூலமும், பெளத்த தரிசனத்தை கடைப்பிடிப்பதன் மூலமும் நானும்கூட சிங்கள பெளத்த சிந்தனையை பலப்படுத்தி வருகிறேனே! எமக்கு அதில் என்ன பிரச்சினை? இந்நாட்டில் சிங்கள- பெளத்தம், பேரினவாதமாக மாறி, பல இனங்கள், பல மதங்கள், பல மொழிகள் என்ற இலங்கை பன்மைத்துவதை இல்லாது ஒழிப்பதே எமது பிரச்சினை.
அதுதான் எமது நீண்டகால போராட்டம். உங்கள் “அரகலய” வுக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது. கொழும்பிலும், நாடு முழுக்கவும் நடைபெற்ற அரகலவில் பங்குபெற்ற மக்களில் நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது சதவிகிதத்தினர், 2019, 2020 தேர்தல்களில் மொட்டு சின்னத்துக்கு, வாக்கு அளித்தவர்கள்.
அவர்கள்தான், கோட்டாபயவின் முட்டாள்தனமான, பொருளாதார கொள்கைள் காரணமாக வயிற்றில் பாரிய அடி விழுந்ததுடன் தெருவுக்கு வந்து போராடியவர்கள்.
மக்களே அரகலவை நடத்தினார்கள்
தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் கூட இவை பிரச்சினைகள்தான். ஆனால், அவற்றையும் மீறிய இன, மத ஒடுக்குமுறைகளால் அவர்கள் துன்பம் அடைந்தார்கள்.
ஆங்காங்கே ஒரு சில தமிழ், முஸ்லிம் மக்கள் இறுதி கால கட்டங்களில் அரகலவில் கலந்து கொண்டார்கள். சில அதிக பிரசங்கி தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் அதீத கற்பனை பண்ணிகொண்டு, “இத்தோடு சேர்த்து இந்நாட்டில் இனவாதத்தையும் ஒழித்து விடுவோம்” என முழங்கியதும் உண்மைதான்.
“நல்லது நடந்தால் சரி” என நாம் அவர்களை வாழ்த்தியதும் உண்மைதான். அவர்கள் இன்று அரசியல் அரங்கில் அந்த அதிக பிரசங்கி தமிழ், முஸ்லிம் இளைஞர்களை காணவில்லை. எது எப்படி இருந்தாலும், அரகல முழுக்க முழுக்க, “வயிற்றில் பாரிய அடி விழுந்ததுடன், தெருவுக்கு வந்த சிங்கள பெருந்திரள் மக்களால்” நடத்தப்பட்டது ஆகும்.
அதுவும் 2019, 2020 தேர்தல்களில் மொட்டு சின்னத்துக்கு வாக்களித்த மக்களால் நடத்தபட்டது.இதுதான் உண்மை.
சிங்கள-பெளத்தர் பலமடைவது சிறுபான்மையினருக்கு பிடிக்காததாலேயே, அவர்கள் அரகலவை நடத்தினார்கள் என்ற மாதிரி கூறி, உண்மையை திரிபு படுத்த வேண்டாம் என முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு கடுமையாக கூறி வைக்க விரும்புகிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.
Hilarious #GotabayaRajapaksa has numerous "self-deprecating jokes" in his #TheConspiracy (Is it?) book. He says #UNP had 17 tents against him in the #GotaGoHome #Aragalaya in Colombo. Then he says, "neither himself nor his brother #MahindaRajapaksa had anything to do with the,… pic.twitter.com/APGve4ByLR
— Mano Ganesan (@ManoGanesan) March 9, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |