சிறிலங்காவை வந்தடைந்தார் கோட்டாபய..!
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சற்று முன்னர் கோட்டாபய ராஜபக்ச தரையிறங்கினார்.
தாய்லாந்திலிருந்து சிங்கப்பூர் வழியாக அவர் நாட்டை வந்தடைந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் ஊடாக இன்று இரவு 11.30 மணியளவில் கோட்டாபய ராஜபக்ச சிறிலங்கா வருவார் என இன்று காலை செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மக்கள் புரட்சியை தொடர்ந்து வெளியேறிய கோட்டாபய
கடந்த ஜூலை 9 ஆம் திகதி வெடித்த மக்கள் புரட்சியை தொடர்ந்து இலங்கையில் இருந்து வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச மாலைதீவு வழியாக சிங்கப்பூரை சென்றடைந்தார். இதேவேளை, அவர் கடந்த 11 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்றிருந்தார்.
முன்னாள் அதிபரான கோட்டாபய ராஜபக்ச இராஜதந்திர கடவுச்சீட்டைக் கொண்டுள்ளதால், 90 நாட்கள் வரை தாய்லாந்தில் அவருக்கு தங்கியிருக்க முடியுமென தாய்லாந்து பிரதமர் முன்னதாக தெரிவித்திருந்தார்.
தாய்லாந்து விடுதி ஒன்றில் தங்கியிருந்த கோட்டாபயவின் பாதுகாப்பு நிலவரத்தை கருத்தில் கொண்டு, அவரை விடுதியை விட்டு வெளியேற வேண்டாம் என தாய்லாந்து காவல்துறையினர் அவருக்கு அறிவுறுத்தியிருந்தனர்.
ரணிலுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்
இந்நிலையில், தாய்லாந்து சென்ற கோட்டாபய இம்மாதம் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் கோட்டாபய ராஜபக்ச தற்போது நாடு திரும்புவது சரியான நேரமில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
அத்துடன், தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியுள்ள கோட்டாபய, கடந்த மாதம் 24 ஆம் திகதி நாடு திரும்புவார் என்று ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதருமான உதயங்க வீரதுங்க ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், தாய்லாந்தில் உள்ள முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் இலங்கை வருகை இம் மாதம் (செப்டெம்பர்) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் முன்னர் வெளியாகியிருந்தன.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பின்னரே, வருகை பிற்போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் நாட்டை வந்தடைந்த கோட்டாபய
நீண்ட இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் கோட்டாபய ராஜபக்ச இன்று சிறிலங்காவை வந்தடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி அயோமா ராஜபக்ச ஆகியோருக்கு விசேட பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.
மிரிஹான வீட்டிற்கு இதற்கு முன்னர் வழங்கப்பட்ட பாதுகாப்பை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.