ஜனாதிபதி கோட்டாபயவுடன் கூட்டமைப்பினர் முக்கிய பேச்சு
தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் மற்றும் பல விடயங்கள் தொடர்பாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுடன் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாளை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நாளை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் சம்பந்தமாக மட்டும் கலந்துரையாடப்படவுள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
எனினும் இந்தக் கலந்துரையாடல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித்தலைவரான செல்வம் அடைக்கலநாதன், இதர விடயங்கள் என தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்தும் இந்த சந்திப்பில் பேசவிருப்பதாக ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்குத் தெரிவித்தார்.
குறிப்பாக தமிழர் தாயகம் உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச படையினர் கபளீகரம் செய்திருக்கின்ற பொதுமக்களின் ஆயிரக்கணக்கான காணிகளை விடுவிப்பது தொடர்பாகவும் பேச்சு நடத்தவிருப்பதாக அவர் கூறினார். அத்துடன் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் அத்துமீறுகின்ற சட்டவிரோதக் குடியேற்றங்கள் என தமிழ் மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் குறித்தும் பேச்சு நடத்தவுள்ளதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தும் முதலாவது சந்திப்பு இது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.