எக்னலிகொட கடத்தலுடன் கோட்டாபயவுக்கு தொடர்பு: சரத் பொன்சேகா பகிரங்கம்!
இறுதி யுத்த காலப்பகுதியில் தெற்கில் இடம்பெற்ற கடத்தல்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் தொடர்புகள் உள்ளதாக முன்னாள் இராணுவ கட்டளைத் தளபதி சரத் பொன்சேகா வெளிப்படுத்தினார்.
யூடியூப் சனல் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.
அதன்படி, உள்நாட்டு யுத்தத்தின் போது அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக செயல்பட்ட கோட்டாபய ராஜபக்சவின் கீழ் இயங்கிய உத்தியோகபூர்வமற்ற ஒரு குழுவே தெற்கில் இடம்பெற்ற பிரகீத் எக்னலிகொட மற்றும் லசந்த விக்ரமதுங்க ஆகியோரின் கடத்தல்களை மேற்கொண்டதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரிகள்
சுரேஷ் சலே, கபில கெந்த விதாரண உள்ளிட்ட அப்போது ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரிகள் குறித்த உத்தியோகபூர்வமற்ற குழுவில் உள்ளடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது வடக்கு, கிழக்கு பகுதிகளின் பாதுகாப்பு தனது முழு கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததாகவும், தெற்கின் பாதுகாப்பானது கோட்டாபயவின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் சரத் பொன்சேகா கூறினார்.
உத்தியோகபூர்வமற்ற குழு
இவ்விடயம் தொடர்பில் குறித்த நேர்காணலில் மேலும் கருத்து தெரிவித்த சரத் பொன்சேகா, “கொழும்பு உள்ளிட்ட தெற்கு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகள் எதுவும் மறைமுகமாக மேற்கொள்ளப்படவில்லை.
எங்களுடைய அமைப்பில் அப்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த புலனாய்வு அதிகாரிகள் எவரும் இந்த கடத்தல்களில் ஈடுபடவில்லை.
தெற்கின் புலனாய்வு நடவடிக்கைகள் தனியாக கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் இடம்பெற்றன. கோட்டாயவுக்கு தனிப்பட்ட ரீதியில் செயற்பட்ட ஓய்வு பெற்ற புலனாய்வு அதிகாரிகளே இந்த கடத்தல்களுக்கு உடந்தையாக இருந்தனர். இந்த விடயங்கள் தொடர்பில் கோட்டாபய என்னிடம் எதுவும் தெரிவித்ததில்லை“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
