சனியன்று நாடு திரும்புகிறார் கோட்டாபய
நாடு திரும்புகிறார் கோட்டாபய
தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் சனிக்கிழமை(03) இலங்கைக்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன விடுத்த கோரிக்கையின் பிரகாரம், அவர் இலங்கைக்கு வருவதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அதிபருக்கான சிறப்புரிமை
கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வந்தவுடன் முன்னாள் அதிபருக்கான சிறப்புரிமைகளை அனுபவிப்பார் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அதனாலேற்பட்ட கட்டுக்கடங்காத வாழ்க்கைச் செலவு மற்றும் பொருட்களின் அதிகரித்த விலையேற்றம் காரணமாக மக்களின் பாரிய புரட்சியை அடுத்து கோட்டாபய ராஜபக்ச, ஜூலை 13ம் திகதி அதிகாலைவேளை நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.
நாடு நாடாக பயணம்
இவ்வாறு வெளியேறிய அவர் முதலில் மாலைதீவிற்கு சென்றார்.அங்கு ஒருநாள் மட்டுமே தங்கியிருந்த நிலையில் மறுநாள் சிங்கப்பூருக்கு சென்றார்.நான்கு வாரங்கள் சிங்கப்பூரில் இருந்த அவர் அங்கிருந்து ஓகஸ்ட் 11ம் திகதி தாய்லாந்திற்கு சென்றார்.தாய்லாந்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் 90 நாட்கள் தங்கியிருக்க அவருக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியிருந்தது.
இந்த நிலையில் அவர் நாளை மறுதினம் சனிக்கிழமை நாடு திரும்பவுள்ளதாக தெரியவருகிறது.

