கோட்டாபயவின் பொதுமன்னிப்பு அரசியலமைப்பிற்கு முரண் - உயர்நீதிமன்றில் சுமந்திரன் வாதம்
பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர படுகொலை வழக்கில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பு, அரசியலமைப்புக்கு முரணானது என்று அதிபர் சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன், உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) அறிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் அவரது தாயார் சுமனா பிரேமசந்திர மற்றும் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் அதிபர் சட்டத்தரணி கசாலி ஹுசைன் ஆகியோர், பொது மன்னிப்பு வழங்கியமையை சவாலுக்கு உட்படுத்தி, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
சட்ட நடைமுறைகளை பின்பற்றாத கோட்டாபய
குறித்த மனுக்கள் ப்ரீத்தி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர, அர்ஜுன ஒபேசேகர ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்போது, ஹிருணிகா பிரேமசந்திர சார்பில் ஆஜரான அதிபர் சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன், பொது மன்னிப்பு வழங்குவதில் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட நடைமுறைகளைப் பின்பற்றிவில்லை என்றும் வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பு அரசியலமைப்புக்கு முரணானது என்றும் மன்றுக்கு அறிவித்தார்.
பொதுமன்னிப்பை வலிதற்றதாக்கும் அதிகாரம்
குறித்த பொதுமன்னிப்பை வலிதற்றதாக்கும் அதிகாரம் மன்றுக்கு இருப்பதாகவும் பொதுமன்னிப்பு வழங்கும் போது சட்டமா அதிபரின் அறிக்கை கோரப்படவில்லை என்று சுமனா பிரேமசந்திரவின் சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்தார்.
மனுமீதான மேலதிக விசாரணைகள் மார்ச் 20,23,28ஆம் திகதிகளில் இடம்பெறும் என்று நீதியரசர்கள் குழாம் அறிவித்தது.
துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு செல்லுபடியற்றது என்று உயர்நீதிமன்றம் அதற்கு தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதற்கமைய கடந்த மே 31ஆம் திகதி இடம்பெற்ற அமர்வில் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச வழங்கிய பொது மன்னிப்பின் செயற்பாட்டை இடைநிறுத்தி, அதற்கு இடைக்கால தடை உத்தரவை உயர்நீதிமன்றம் விதித்திருந்தது.
2021ஆம் ஆண்டு ஜூலை மாதம்
தாக்கல் செய்யப்பட்ட குறித்த
மனுவில், துமிந்த சில்வா, நீதி
அமைச்சர் அலி சப்ரி, இலங்கை
சட்டத்தரணிகள் சங்கத்தின்
தலைவர் சாலிய பீரிஸ், சங்கத்தின்
செயலாளர் ரஜீவ் அமரசூரிய
மற்றும் சட்டமா அதிபர்
ஆகியோர் பிரதிவாதிகளாக
குறிப்பிடப்பட்டுள்ளனர்.
