“பெரும்பான்மைவாதத்தின் பாகுபாடே ஆயுதப் போராட்டத்திற்கு வழிவகுத்தது”
பதவியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட அதிபர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட, ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் ஒருவர், போரினால் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததை இந்தியாவில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சின் பங்களிப்புடன் டெல்லியில் நடைபெற்ற புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார கலந்துரையாடல் (Raisina Dialogue) சபையில் கருத்து வெளியிட்ட, இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இலங்கையில் அதிகரித்த யுத்தச் செலவு எவ்வாறு அபிவிருத்திக்கு தடையாக இருந்தது என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
"1985இல் எங்களின் பாதுகாப்புச் செலவு 188 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது, ஆனால் 2008இல் யுத்தத்தின் முடிவில் இந்த செலவு 1. 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்தது" என பாலசூரிய கூறியுள்ளார்.
மேலும், நாட்டின் தேசியவாதம் 'சில சமூகங்களை' ஆயுதப் போராட்டத்திற்குள் தள்ளியது என்பதை இராஜாங்க அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார்.
அதிகாரப் பகிர்வின்றி இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியாது என ஒற்றையாட்சியை காப்பாற்ற தொடர்ந்து போராடும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் இந்தியாவில் தெரிவித்துள்ளார்.
“இது சில சமூகங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டியமை அவர்களை ஆயுதம் ஏந்த வழிவகுத்தது. வளர்ச்சி என்பது சமூகத்தின் சில பிரிவுகளுக்கு மட்டுப்படுத்தப்பட முடியாது.
அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நாம் அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளாவிட்டால், பெரும்பான்மைவாதம் என்ற துருப்புச் சீட்டை, அரசியல்வாதிகள் பயன்படுத்தி, குறிப்பிட்ட சமூகங்கள் மற்றும் பிரிவினரின் ஆதரவை பெற்றுக்கொள்ள முயற்சிப்பார்கள்.
இது கவனிக்கப்பட வேண்டும். இது நிலையான வளர்ச்சியைக் கொண்டிருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.”
நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தமும் வடக்கு, கிழக்கில் இன்னமும் தொடரும் இராணுவ மயமாக்கலும்தான் பிரதான காரணம் என ஒவ்வொரு தமிழ் அரசியல்வாதிகளும், போரினால் பாதிக்கப்பட்ட சமூகத் தலைவர்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தாலும், தென்னிலங்கை அரசியல் தலைமைத்துவங்கள் அதனை இதுவரை ஏற்றுக்கொண்டுள்ளவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |