7500 இலிருந்து 10000 வரை அதிகரிக்கப்படவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்
எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு செய்யப்படுமென நிதி அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை விசாரிக்க முந்தைய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட உதய ஆர். செனவிரத்ன குழு அறிக்கையின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு சம்பள அதிகரிப்பு குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில், தற்போதுள்ள சம்பள அளவுகளின்படி ரூபா 7,500 முதல் ரூபா 10,000 வரையிலான தொகை அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அமைச்சக வட்டாரங்கள்
அத்தோடு, ஒவ்வொரு சம்பள அளவுகோலுக்கும் ஏற்ப அடிப்படை சம்பள உயர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான சூத்திரம் நிதி அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதியே அதிகரிக்க வேண்டிய தொகையை முடிவு செய்வார் என்றும் நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், பெப்ரவரி மாதம் நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்படும் 2025 வரவு செலவு திட்டத்தில் தொடர்புடைய சம்பள உயர்வு அறிவிக்கப்பட உள்ளது.
சம்பள உயர்வு
வரும் ஏப்ரல் முதல் சம்பந்தப்பட்ட சம்பள உயர்வு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. நாடு எதிர்மறையான பொருளாதாரத்தில் இருந்தபோதும், முந்தைய அரசாங்கம் ஜனவரி 2024 முதல் சம்பளத்தை ரூ.10,000 அதிகரித்தது.
இந்த நிலையில், செலுத்த வேண்டிய ரூபா 15,000 நிலுவைத் தொகையை இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை தலா ரூபா 5,000 தவணைகளில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த நான்கு காலாண்டுகளாக நாட்டின் பொருளாதாரம் நேர்மறையான நிலையில் இருப்பதாலும், அரசாங்க வருவாய் சுமார் 38 சதவீதம் அதிகரித்துள்ளதாலும், பொது ஊழியர்களின் சம்பளத்தை ரூபாய் 10,000 இற்கும் அதிகமாக உயர்த்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், கடந்த சில நாட்களில் அரசு ஊழியர்களுக்கு உறுதியான சம்பள உயர்வு செயல்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |