விடுதலைப் புலிகளை நினைவு கூர பாதுகாப்பு வழங்கும் அரசு : நாமல் பகிரங்க குற்றச்சாட்டு
விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு வழங்கும் அரசாங்கம் இராணுவத்தினரை நினைவுகூரும் நிகழ்வுகளுக்கு இடையூறு விளைவிக்கிறது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SlPP) தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாட்டின் இராணுவ வீரர்களுக்காகவும், ஒற்றையாட்சிக்காகவும் என்றும் நாம் முன்னிற்போம். ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைகளில் இராணுவத்தினருக்கு முன்னுரிமை இல்லை.
இராணுவ பாதுகாப்பு
உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தனியார் விமானத்தில் வியட்நாமிலிருந்து வருகை தருமளவுக்கு தேர்தலுக்கு வழங்கிய முக்கியத்துவத்தை, ஜனாதிபதி இராணுவ வீரர்களுக்கும் வழங்க வேண்டும்.
அதேவேளை யுத்தத்தில் உயிர் நீத்த படை வீரர்களை நினைவு கூரும் நிகழ்வுக்கு சகல முன்னாள் அரச தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும்.
விடுதலைப் புலிகளை நினைவு கூரும் நிகழ்வுகளுக்கு காவல்துறை மற்றும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்படுகிறது ஆனால் இராணுவத்தினரை நினைவு கூரும் நிகழ்வுகளுக்கு அரசாங்கத்தால் இடையூறு விளைவிக்கப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு
நல்லாட்சி அரசாங்கத்தில் இராணுவத்தினர் பழி வாங்கப்பட்டனர். புலனாய்வுப்பிரிவு வீழ்ச்சியடைந்தது. அதன் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றன.
தற்போது பாதாள உலகக் குழுக்கள் தலைதூக்கியுள்ளன.புலனாய்வுப்பிரிவை பலவீனப்படுத்திவிட்டு தேசிய பாதுகாப்பு தொடர்பில் வகுப்பெடுப்பதில் பிரயோசனம் இல்லை.
எனவே புலனாய்வுப்பிரிவை மீண்டும் பலப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this
