வீழ்ச்சியின் விளிம்பில் அரச நிறுவனங்கள் - நிபுணர் குழுவின் கீழ் கொண்டுவரப்பட வேண்டுமென கோரிக்கை
மின்சார சபை உள்ளிட்ட அரச நிறுவனங்கள் உடனடியாக நிபுணர் குழுவின் கீழ் கொண்டுவரப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பாட்டலி சம்பிக்க ரணவக்க, பெற்றோல் லீற்றருக்கு 120 ரூபாவும் டீசல் லீற்றருக்கு 105 ரூபாயும் கூடுதலாக செலுத்த வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
''எரிபொருள் தட்டுப்பாடு இல்லாமலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்காமலும் இருந்திருந்தால் மேலதிக தொகையை புறக்கணித்திருக்கலாம்.
நாட்டில் 50 வீதமான மின் உற்பத்திக்கு அனல் மின் நிலையங்களே காரணம். எவ்வாறாயினும் எஞ்சிய நிலக்கரி கையிருப்பு ஜூன் மாதம் வரை மாத்திரமே போதுமானது.
மத்திய வங்கி, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், கலால் திணைக்களம், சுங்கம், பெற்றோலியக் கூட்டுத்தாபனம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, அரச மருந்துக் கூட்டுத்தாபனம், லிட்ரோ கேஸ் மற்றும் போக்குவரத்து சபை ஆகிய நிறுவனங்கள் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளன.
ஊழல் அரசியல்வாதிகளுக்கு சேவை செய்யும் அதிகாரிகளிடமிருந்து அரச நிறுவனங்கள் காப்பாற்றப்பட வேண்டும்.
மார்ச் 5ஆம் திகதிக்கு பின்னர் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது அல்லது நாட்டிற்கு நல்ல எதிர்காலம் உள்ளது என பொறுப்பற்ற வகையில் கருத்து வெளியிடுவதை விடுத்து, தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தற்போதைய அரசாங்கம் மீது எவருக்கும் நம்பிக்கை இல்லை, அதிகாரத்தில் உள்ள குழுவிடம் இருந்து நிதி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு அரசியலமைப்பின் கீழ் நாடாளுமன்றத்திற்கு பொறுப்பு காணப்படுகிறது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தகராறுகளை உருவாக்குவதை தவிர்த்து, அதற்கு பதிலாக ஜனநாயக ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக எழும் பொறுப்பு பொதுமக்களுக்கு காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.
