முஸ்லிம்களின் வாக்குகளுக்காகவே நல்லாட்சி அரசு குண்டுத்தாக்குதலை தடுக்கவில்லை: சரத் வீரசேகர காட்டம்
முஸ்லிம்களின் வாக்குகளை இழக்க கூடாது என்பதற்காகவே நல்லாட்சி அரசாங்கம் குண்டுத்தாக்குதலை தடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இஸ்லாமிய அடிப்படைவாதியான பயங்கரவாதி சஹ்ரான் மீதும் அவரது தரப்பினர் மீதும் கடும் கோபம் எமக்குள்ளது. அதே போல் குண்டுத்தாக்குதலுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒத்துழைப்பு வழங்கியவர்கள் மீதும் கடும் கோபம் உள்ளது.
சஹ்ரானின் உறுதி பிரமாணம்
சிறுபான்மையினத்தவரின் வாக்குகளுக்காகவே நல்லாட்சி அரசாங்கம் குண்டுத்தாக்குதலை தடுக்கவில்லை.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்கல் இடம்பெறுவதற்கு முன் 2019.04.20 ஆம் திகதி பயங்கரவாதி சஹ்ரான் உறுதி பிரமாணம் செய்து அதனை 28 நிமிட காணொளியில் பதிவு செய்துள்ளார்.
சஹ்ரான் உட்பட அடிப்படைவாதிகள் தமது உறுதிமொழியில் எவ்விடத்திலும் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வர தாம் தமது உயிரை தியாகம் செய்வதாக குறிப்பிடவில்லை.
சர்வதேச விசாரணை பயனற்றது
மத மாரக்கத்துக்காகவே இஸ்லாம் அடிப்படைவாதிகள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறினார்கள்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துவது பயனற்றது, எனெனில் இரண்டு சர்வதேச மட்டத்திலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தமது குறைகளை மறைத்துக் கொள்வதற்காகவே 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த தற்போதைய எதிர்க்கட்சிகள் சர்வதேச விசாரணைகளை கோருகிறார்கள் என்றார்.