இலஞ்ச ஊழல் வழக்குகள் மூலம் அதிக வருமானம் ஈட்டிய அரசாங்கம்!
இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச, ஊழல் வழக்குகள் மூலம் அரசாங்கம் சுமார் 3 மில்லியன் ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மூலம் மாத்திரம் அரசாங்கத்திற்கு 2,819,000 ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
வருவாய்
குறித்த நீதிமன்றங்களால் பிரதிவாதிகளுக்கு எதிராக விதிக்கப்பட்ட அபராதம், இழப்பீடு மற்றும் தண்டனைகளிலிருந்து அரசாங்கம் இந்த வருவாயைப் பெற்றுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

மேலும், இந்த ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி நிலவரப்படி, இலஞ்சம், ஊழல் மற்றும் பணமோசடி போன்ற குற்றங்களுக்காக 126 பிரதிவாதிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் 95 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தற்போது 287 வழக்குகள் மேல் நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம் மற்றும் மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |