அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் சம்பள விவகாரம் : அநுரவின் அதிரடி நடவடிக்கை
அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்குவதற்கும், அரச சேவையை நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மறுசீரமைப்பதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதற்கமைய புதிய "சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழு" ஒன்றினை ஜனாதிபதி நியமித்துள்ளதுடன் இது தொடர்பான உத்தியோகபூர்வ பிரகடனத்தை உள்ளடக்கிய 2494/05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று நேற்று (2026.06.22) வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையினால் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் ஜனாதிபதியினால் இந்த ஆணைக்குழு தாபிக்கப்பட்டுள்ளது.
அரச சேவை கட்டமைப்பு
15 உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆணைக்குழுவின் தலைவராக தெல்கே அஸோக பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஆணைக்குழுவின் செயலாளராக டி.எம்.சீ.நாலக்க திசாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள கட்டளைகளாக, சம்பள மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளினால் பகிரங்க நிதிசார் முகாமைத்துவத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்தில் கொண்டு, அவற்றுக்கு நிலைபேறான தீர்வுகளை வழங்குவதற்கான பரிந்துரைகளைச் சமர்ப்பித்தல்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை (SC/FR 23/2014) மற்றும் அமைச்சரவைத் தீர்மானங்களைக் கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்த அரச சேவைக்கான கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்பு முன்மொழிவுகளை வழங்குதல்.
திறமையான நபர்களை அரச சேவைக்கு ஈர்க்கும் வகையிலும், அவர்கள் அரச சேவையை விட்டு விலகிச் செல்வதைத் தடுக்கும் வகையிலும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப ஊக்குவிப்புகளைப் பரிந்துரைத்தல்.
ஜனாதிபதியின் பணிப்புரை
புதிய தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி, இலங்கையின் அரச சேவையை எதிர்காலத்திற்கு உகந்த, பிஜைகள் மையப்படுத்தப்பட்ட மற்றும் பொறுப்புணர்வுடைய சேவையாக மாற்றுவதற்கான மூலோபாயங்களை வகுத்தல்” என்பவை அமைந்துள்ளன.

இந்த ஆணைக்குழுவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அனைத்துப் பணிகளையும் ஒரு வருடத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் ஆய்வுகள் மற்றும் விசாரணைகளுக்குத் தேவையான சகல உதவிகளையும், தகவல்களையும் வழங்க வேண்டும் என அனைத்து அரச அலுவலர்களுக்கும் ஏனைய நபர்களுக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
எவரேனும் ஓர் அரச அலுவலரோ, அமைச்சின் அதிகாரியோ அல்லது கூட்டுத்தாபன அதிகாரியோ ஆணைக்குழுவின் பணிகளை நிறைவேற்றத் தாமதித்தால் அல்லது தவறினால், அது குறித்து உடனடியாகத் தன்னிடம் அறிக்கையிடுமாறு ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |