அநீதி இழைக்கும் அநுர அரசு : கிழக்கிலும் வெடித்த போராட்டம்
மூதூர் (Mutur) தள வைத்தியசாலையின் தாதியர்கள் அரசின் வரவு – செலவுத் திட்டத்தில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்றைய தினம் (27.02.2025) 12 மணி தொடக்கம் 1.00 மணி வரை சுமார் ஒரு மணித்தியாளங்கள் இடம்பெற்றுள்ளது.
2025ஆம் ஆண்டு வரவு செலவு திட்டமானது தமக்கு பாதகமாக அமைந்துள்ளதாக தெரிவித்து இவ் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிகநேர கொடுப்பனவு
இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண அரச தாதி உத்தியோகத்தர் சங்க தலைவர் எம்.எம்.பைஸாத் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்.
“நாடு பூராக அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தினால் நண்பகல் 12 மணி தொடக்கம் ஒரு மணி வரை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
அந்த வகையில் மூதூர் தள வைத்தியசாலையிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
கவனயீர்ப்பு போராட்டம்
இம்முறை வரவு செலவு திட்டத்தில் அரசாங்கமானது சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் சம்பளத்தினை அதிகரித்திருக்கிறது.அந்த வகையில் தாதி உத்தியோகத்தர்களுக்கும் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தாதி உத்தியோகத்தர்களுக்கான மேலதிகநேர கொடுப்பனவு , விடுமுறை தின கொடுப்பனவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டதை விட இம்முறை குறைவாக வழங்கப்பட்டமையினாலே நாம் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்கின்றோம்.
அத்தோடு தமது பதவி உயர்வு காலமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.எழுத்து மூலமாக இந்த அரசாங்கத்திடம் எமது சங்கம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்திருந்த போதிலும் அதற்கு உரிய தீர்ப்பு கிடைக்கப்பெறவில்லை.அதனால் தான் போராட்டத்தை முன்னெடுக்கின்றோம்.
எமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்போம் ” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் உள்ள தாதியர்கள் கல்முனை நிந்தவூர் அக்கரைப்பற்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைகளின் முன்பாக ஒன்று கூடி இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
2025 வரவு செலவுத் திட்டத்தில் தன்னிச்சையாக கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்று (27) ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச தாதியர் சங்கம் தெரிவித்திருந்தது.
இதற்கமைய நோயாளிகளுக்கு எந்த வித பாதிப்பும் இன்றி கல்முனை நிந்தவூர் அக்கரைப்பற்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சில தாதியர்கள் எதிர்ப்பினை முன்னெடுத்ததை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை குறித்த போராட்டமானது வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாது எனவும் இன்று நண்பகல் 12:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை மதிய உணவு வேளையில் போராட்டம் நடத்தப்படும் என சங்கத்தின் உப தலைவர் நாலக ஹெட்டியாராச்சி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |










