தமிழர் பிரதேச பாடசாலையொன்றில் மீறப்பட்ட மனித உரிமை : சிக்கலில் மாணவர்கள்
திருகோணமலையிலுள்ள பாடசாலையொன்றில் மனித உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பில் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட மூதூர் வலயக்கல்விப் பிரிவிற்கு உட்பட்ட வெருகலம்பதி மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், மேற்படி பாடசாலையில் மனித உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பில் முறையிட இன்று (27) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் திருகோணமலை பிராந்தியக் காரியாலயத்திற்கு வருகை தந்திருந்துள்ளனர்.
கட்டாய இடமாற்றம்
குறித்த பாடசாலையில் 45 இற்கும் அதிக கிறிஸ்தவ மாணவர்கள் கல்வி பயில்வதாகவும் அவர்களுக்கான கிறிஸ்தவ பாடத்திற்கான பாடப் புத்தகங்க வழங்கப்படாமை குறித்து ஏற்கனவே மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, புத்தகங்கள் பெறப்பட்டு ஒரு சில நாட்களில் அங்கு கடமையாற்றிய கிறிஸ்தவ ஆசிரியருக்கு கட்டாய இடமாற்றம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இம்முறை கா.பொ.த சாதாரண தர பரீட்சைகளில் தோற்றவிருக்கும் மாணவர்களும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக அனைத்து மட்டங்களிலும் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் திட்டமிட்ட வகையில் தாம் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி தமக்கான தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
