அரச ஊழியர்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்
அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கும் முழுமைக்கும் தீர்வை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலங்களில் கோரிக்கையை வென்றெடுக்கும் சூழல் உருவாகும் என்பதை தொழிற்சங்கங்கள் நன்கு அறிந்திருப்பதால், ஒரு குழுவினர் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த முயல்வதாக நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நியாயமான பிரச்சினைகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு துறையிலும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக முறையான முறைமை பின்பற்றப்படுவதாகவும் அதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் நியாயமான பதில் வழங்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கெல்லாம் தீர்வு காண நியமிக்கப்பட்டுள்ள சக்தி வாய்ந்த குழு மூலம் நியாயமான தீர்வு கிடைக்கும் என உறுதியளித்துள்ளார்.
சுமார் நான்கு வருடங்களாக தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக மக்களின் உயிரைக் காப்பாற்றும் போராட்டத்தையே அரசாங்கம் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
இதன் காரணமாக அரசாங்க ஊழியர்களின் தொழில் வாழ்க்கையில் நியாயமான பிரச்சினைகள் இருப்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சம்பள அதிகரிப்பு மற்றும் கொடுப்பனவு
இதேவேளை, அனைத்து சம்பள முரண்பாடுகளையும் நீக்கி சம்பள அதிகரிப்பு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளுக்கான தீர்வுகளை வழங்குவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நிபுணர் குழுவொன்றை அதிபர் நியமித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன (bandula gunawardane) தெரிவித்துள்ளார்.
சில சம்பள அதிகரிப்பு மற்றும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் இந்த வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு காணப்படவில்லை என்பதை நினைவுகூர்ந்த அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் அதிபர் இந்த நிபுணர் குழுவை நியமித்ததாக வலியுறுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |