நொடிக்கு நொடி மாறும் மக்களின் வாழ்க்கை! கண்டுகொள்ளாத அரசாங்கம் - சஜித் குற்றச்சாட்டு
நாட்டை நாளுக்கு நாள் அதள பாதாளத்திலும் இருளிலும் தள்ளும் அரசாங்கத்திற்கு எதிராக இந்நாட்டு மக்கள் ஜனநாயகத்துக்காக போராடி வருகின்றனர். அத்தகைய ஜனநாயகப் போராட்டங்களுக்கு எதிராக அரசாங்கம் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அதற்கு எதிராகவும் நாம் மக்கள் பக்கமே முன்நிற்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajithn Premadasa) தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நொடிக்கு நொடி மக்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவகின்றனர். இவற்றை அற்பமேனும் கருத்திற் கொள்ளாத அரசாங்கத்தால் தற்போது நாட்டில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற சட்டங்களின் ஊடாக மக்களை அடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. அவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.
மக்கள் எதிர்பார்ப்புகள் வீண்போன, நாட்டை இருளில் ஆழ்த்திய இந்த பலவீனமான, திறமையற்ற, மக்கள் விரோத அரசாங்கம், அரச தலைவர் உட்பட அனைவரும் பதவி விலகிவிட்டு நாட்டை முன்னோக்கி நடத்தக்கூடிய ஒரு குழுவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும்.
இந்த ஜனநாயகப் போராட்டங்களுக்கு முன் நிற்பதோடு, அரச அடக்குமுறைக்கு உள்ளான அனைத்து குடி மக்களுக்கும் கட்சி வேறுபாடின்றி சட்ட உதவிகளை இலவசமாக வழங்க 600 க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
