புதிய ஆட்சியிலும் கிடப்பில் போடப்படும் தாயக பிரச்சினைகள்! தமிழர் தரப்பு ஆதங்கம்
நாட்டில் யார் ஆட்சியாளராக வந்தாலும், தமிழ் மக்களின் விடயத்தில் ஒரே நிலைப்பாட்டில் தான் தமது பொறிமுறைகளை முன்னகர்த்துவதாக வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஓகஸ்ட் 30 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவு தினம் அனுஸ்டிக்கப்படும் அதே நேரம், தமிழ் மக்களுக்கான தீர்வை வலியுறுத்தி போராட்டம் ஒன்றையும் முன்னெடுப்பதற்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது குறித்து யாழ்ப்பாண (Jaffna) ஊடக அமையத்தில் இன்று ஊடக சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி
இதன்போது, வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரும் சங்கத்தின் செயலாளரும், குறித்த அமைப்பின் வவுனியா மாவட்டத்தின் தலைவியுமான சிவானந்தன் ஜெனிதா தெரிவித்துள்ளதாவது,
சர்வதேச வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நினைவு நாளான ஓகஸ்ட் 30 ஆம் திகதியன்று முன்னெடுக்கப்படவுள்ள நீதிக்கான போராட்டத்திற்கு வேற்றுமைகள் இன்றி ஒருமித்த குரலாக ஓங்கி ஒலிக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
குறித்த நாளன்று வட மாகாணத்தில் - யாழ்ப்பாணத்திலும், கிழக்கு மாகாணத்தில் - மட்டக்களப்பிலும் மாபெரும் கவனயிரப்பு பேரணியை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு பகுதியில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம், சர்வதேச நீதிகோரி தொடர்ச்சியாக போராடிவருகின்றோம்.
முள்ளிவாய்க்கால் பேரவலம்
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு முன்னரும், அதன் பின்னரும் சிறுவர்கள். பெண்கள் உட்பட பலர் வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
செம்மணி மனித புதைகுழி உட்பட பல மனித புதைக்குழிகளும், சித்திரவதை முகாம்களும் இனப்படுகொலைக்கான முக்கிய ஆதாரங்களாக எம் கண் முன் நிலைத்து நிற்கின்றது.
இவை அனைத்தும் சர்வதேச விசாரணை ஒன்றின் கீழ் முறையாக விரைந்து விசாரிக்கப்பட வேண்டும். அத்துடன் சர்வதேச நீதி விசாரணை காலதாமதமின்றி நடத்தப்படவேண்டும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் பெற வேண்டிய உண்மையான நீதியும், அவர்களது பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் சர்வதேச சமூகத்தின் செயற்பாடுகள் இன்றியமையாதவையாகும்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை
நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடரில் அனைத்து நாடுகளும் ஒருமித்து இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு, மனித உரிமைகளை பேணும் அனைத்து நாடுகளிடமும் கோருகின்றோம்.
செம்மணி மனித புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்படும் உடல்கள் தொடர்பான சர்வதேச விசாரனை வேண்டும் என நாம் கோரும் அதேவேளை, உள்ளக விசாரணையை திணிக்கும் தலைவரைக் கண்டித்தும் பாரிய கண்டன பேரணியினை எதிர்வரும் 30 ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளோம்.
எனவே இப்பேரணியில் மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பத்தினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள், தொழிலாளர் சங்கங்கள், கிராமிய அமைப்புகள் மற்றும் பொது மக்கள் அனைவருரையும் இணையுமாறு அழைப்பு விடுப்பதாக சிவானந்தன் ஜெனிதா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நல்லூர் கந்தசுவாமி கோவில் 12 ஆம் நாள் திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 20 மணி நேரம் முன்
