கிழக்கு ஆளுநர் பதவி விலக வேண்டும்: மா.சத்திவேல் வலியுறுத்து
தியாக தீபம் திலீபன் மக்கள் அஞ்சலி ஊர்தியும் அதனோடு பயணித்தவர்கள் தாக்கப்பட்டமைக்கு தார்மீக பொறுப்பை ஏற்று கிழக்கு மாகாண ஆளுநர் பதவி விலக வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களிடத்தும், ஒட்டு மொத்த தியாக தீபம் திலீபன் உணர்வாளர்களிடத்தும் ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அத்தோடு, இலங்கையின் பாதுகாப்பு துறை அதிபரிடமே உள்ளது என கூறியுள்ள மா.சத்திவேல், அவரின் பிரதிநிதியாகவே மாகாண ஆளுநர் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெரிய குற்றம்
மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில், “ஆளுநர் தனது கடமையை செய்ய தவறி விட்டு அமைதியாக வீதியில் பயணித்த நினைவஞ்சலி குழுவினரை குற்றம் சாட்டுவதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
சிங்கள பௌத்த இனவாத காடையர்களை பாதுகாக்க ஆளுநர் நாடாளுமன்ற உறுப்பினர் மீதும் ஊர்தியோடு பயணித்தவர்கள் மீதும் குற்றம் சுமத்துகின்றார்.
எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை எவருக்கும் உள்ளது என்ற போதிலும் தாக்குதல் நடத்தவும், சேதங்கள் விளைவிக்கவும் எவருக்கும் உரிமை இல்லை.
தாக்கி சேதங்களை விளைவித்தவர்களை பாதுகாக்கும் நோக்கில் பொறுப்பு வாய்ந்த ஆளுநர் கருத்து தெரிவிப்பதன் மூலம் அவர் யாருக்கு பொறுப்பு வகிக்கின்றார் என்பது தெளிவாக இருக்கிறது. எனவே ஆளுநர் பொறுப்பு தவறியது முதற் குற்றம் எனவும் பொறுப்பை தட்டிக் கழித்து பிழையை அடுத்தவர் மேல் சுமத்துவது அதனை விட பெரிய குற்றம்.
இன, மத ரீதியிலான கொலை குற்றவாளிகளே நாட்டை ஆளுகின்ற போது சாதாரண மக்கள் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்படுவது இயல்பே ஆகும்.
இதற்கு முகம் கொடுக்கவும், தமிழர்களின் அரசியலை வென்றெடுக்கவும் தமிழர் தேசமாக தியாக தீபம் திலீபனின் உயிர்தியாக நாளில் ஒன்று சேர்வோம் எனவும் தமிழ் மக்களின் சக்தியை வெளிப்படுத்தி, அரசியல் வழிதடத்தை தீர்மானிப்போம் ”எனவும் மா.சத்திவேல் அழைப்பு விடுத்துள்ளார்.