உண்ணாநிலை மேடையில் சோர்வுற்ற திலீபன் : எட்டாம் நாள் தியாகத்தருணம்
தியாக தீபம் திலீபனின் பன்னிருநாள் தியாக அறவழித்தடத்தின் எட்டாம் நாளான இன்று அவரது தியாகப் பயணம் குறித்த பேசுபொருள் தமிழகம் மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் எதிரொலிக்க நல்லூர் ஆலய முன்றல் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தது.
தமிழர் தாயகத்தின் பல பாகங்களிலும் மக்கள் அடையாள உண்ணா நிலைப்போராட்டங்களை நடத்த ஆரம்பித்ததால் தமிழர் தாயகம் அறவழியில் தகித்துக்கொண்டிருந்தது.
ஆனால் உண்ணாநிலை மேடையில் இருந்த திலீபனின் உடல் நிலையோ மிகவும் மோசமடைந்திருந்தது. அவரால் விழிகளைக் கூடத் திறக்க முடியவில்லை. தன்னைச்சுற்றி என்ன நடக்கின்றது என்பதை நோக்க முடியவில்லை.
36 ஆண்டுகளுக்கு முன்னான அந்த உறுதிமிக்க தியாகத்தருணம் இன்றைய நாளில் நினைவூட்டப்படுகிறது.
திலீபனின் தியாகப் பயணம்
முதலாம் நாள்
தமிழர் தாயகத்தின் ஆன்மாவில் ஆழப் பதிந்து விட்ட தியாக தீபம் திலீபனின் 12 நாள் ஈகைப் பயணத்தின் நினைவு இன்னொரு வருடமாக(36 ஆவது நினைவேந்தல்) இன்று பிறந்தது.
இரண்டாம் நாள்
தமிழர் தாயகத்தின் ஆன்மாவில் ஆழப்பதிந்துவிட்ட தியாகி திலீபனின் பன்னிருநாள் ஈகைப்பயணத்தின் இரண்டாம் நாள் இன்றாகும்.
இந்திய அசோகச்சக்கரத்தியிடம் தன் தாயகத்திற்கு நீதி கோரி ஈகப்பயணம் செய்த தியாகியின் இரண்டாம் நாளில் அங்கு கூடியிருந்த மக்களுக்காவும் ஈழத் தமிழினத்துக்காகவும் உரையாற்றியிருந்தார்.
அவரது அந்தக் குறுகிய தனது தாய்நாட்டிற்காக உயிர் துறப்பதை எண்ணும் போது மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவதாக குறிப்பிட்டவர் மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடன் இறுதி விடைபெறுவதாக கூறியபோது மக்கள் உணர்வுமயப்பட்ட அந்த தியாகத்தருணம் இன்றைய நாளில் நினைவூட்டப்படுகிறது.
மூன்றாம் நாள்
தமிழர் தாயக ஆன்மாவின் முதன்மைத் தியாகியான திலீபனின் பன்னிருநாள் ஈகைப்பயணத்தின் மூன்றாம் நாள் இன்றாகும்.
இன்றைய நாளில் நல்லை ஆலய முன்றலில் திரண்ட மக்கள் கூட்டத்தின் தொகை இலட்சத்தைத் தாண்டியிருந்தது.
ஒரு சொட்டு நீரை அருந்தாத ஒரு மனித உடலில் எவ்வாறான பாதகங்கள் ஏற்படுமோ அவ்வாறான பாதகங்கள் அனைத்தும் திலீபனின் உடலில் இன்றைய நாளில் தென்பட்டது.
ஆனால் உடலில் தளர்வு ஏற்பட்ட போதும் அவர் தனது மனதை திடமாக வைத்திருந்தார்.
திலீபன் தமிழ் இனத்தின் பிரதிநிதியென்ற எண்ணம் மக்கள்
மத்தியில் நிறைந்திருந்த அந்த தியாகத்தருணம் இன்றைய
நாளில் நினைவூட்டப்படுகிறது.
நான்காம் நாள்
தியாக தீபம் திலீபனின் பன்னிரு நாள் அறவழித்தடத்தின் நான்காம் நாள் இன்றாகும்.
இந்திய அசோகச் சக்கரத்திடம் தன் தாயகத்திற்கு நீதி கோரி இடம்பெற்ற இந்த ஈகப் பயணத்தின் இன்றைய நாளில் நீர் மற்றும் உணவு கிட்டாத ஒரு மனித உடலில் எதிர்பார்க்கபடக்கூடிய இயங்கியல் குளறுபடியால் திலீபனால் ஒழுங்காக தூங்கவும் முடியவில்லை.
இன்று பகல் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து ஓர்
முக்கிய பிரமுகர் யாழ்ப்பாணம் சென்று திலீபனது
கோரிக்கைகள் குறித்து பற்றிப் பேசியிருந்தாலும் இந்தப் பேச்சுக்களில் அவரது கோரிக்கைள் இந்தியத் தரப்பால்
ஏற்கப்படவில்லை.
இதனால் தமிழினத்துக்கான திலீபன் இழக்கப்படக்கூடும் என்ற
துயர நிலை முகைவிட்டிருந்தது.
ஐந்தாம் நாள்
தியாக தீபம் திலீபனின் பன்னிரு நாள் தியாக அறவழித்தடத்தின் ஐந்தாம் நாள் இன்றாகும்.
இன்றைய நாளில் திலீபனின் உடல் இயக்கம் முடங்கியிருந்தது. யாழ். குடாநாட்டின் பலமுனைகளில் இருந்தும் மக்கள் வெள்ளம் நல்லூர் ஆலய முன்றலில் திரண்டிருந்தாலும் திலீபன் போர்வைக்குள்ளேயே புதைந்து கிடந்தார்.
உடல் கடுமையாக வியர்த்திருந்தது. அன்று இன்றைய நாளில் வெளியான தமிழ் பத்திரிகைகளில் திலீபன் உடல்நிலை மோசமாகி வருவதான செய்திகள் வந்திருந்தன.
திலீபன் ஒரு மெழுகுவர்த்தியைப்போல் காந்திய தேசத்தின் முன்றலில் தமிழினத்துக்காக சிறிது சிறிதாக உருகிக்கொண்டிருந்தார்.
அவரது சிறுநீரகங்கள் செயலிழந்து கொண்டிருந்த
நிலையில் அவரது தியாகத்தருணம்
நினைவூட்டப்படுகிறது.
ஆறாம் நாள்
தியாக தீபம் திலீபனின் பன்னிருநாள் தியாக அறவழித்தடத்தின் ஆறாம் நாள் இன்றாகும்.
இன்றைய நாள் விடிந்தபோதே திலீபன் தனது தியாக மரண வாசலின் விளிம்புக்கு வந்துவிட்டதன் அறிகுறிகள் தெரிந்தன.
இன்று மாலை திலீபனைப் பார்வையிடுவதற்காக இந்திய அமைதிப் படையின் யாழ். கோட்டை இராணுவ முகாம் பொறுப்பாளர் சென்ற போது அங்கு கூடி நின்ற மக்கள் கூட்டத்தின் சீற்றம் அவர் மீதும் திரும்பியிருந்தது.
திலீபனின் உடல்நிலை மோசமாகி வருவதால் மக்கள் மிகுந்த உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருப்பதை நேரடியாகவே அந்த இராணுவ உயரதிகாரி கண்டு கொண்டார்.
இந்த நிலையில், அந்த அதிகாரி மேலிடத்துக்கு அனுப்பும் அறிக்கை மூலமாவது திலீபனின் உயிர் காப்பாற்றப்படும் என்ற அற்ப நம்பிக்கையுடன் மக்கள் இருந்த நிலையில் அந்தத் தியாகத் தருணம் மீண்டும் நினைவூட்டப்படுகிறது.
ஏழாம் நாள்
தியாகி திலிபனின் பன்னிருநாள் தியாக அறவழித்தடத்தின் ஏழாம் நாள் இன்றாகும்.
ஒரு துளி நீர்கூட அருந்தாத அவரது இந்தப்போராட்டம் குறித்து இந்தியாவுடன் முதல்நாள் நடத்திய பேச்சுக்களின் முடிவுகள் குறித்த ஆவல் பலருக்கு இன்றைய நாளில் எழுந்திருந்தது.
ஆனால் இந்தியத்தரப்பில் முதல்நாளில் நடத்தப்பட்ட பேச்சுக்களில் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டிருக்காத யதார்த்தமே எஞ்சியிருந்தது.
எனினும் தனது அறவழியை கைவிடப்போவதில்லையென திலிபன் ஈனக்குரலில் உறுதியாக மறுத்திருந்தார்.
அந்த உறுதிமிக்க தியாகத்தருணம் இன்றைய நாளில் நினைவூட்டப்படுகிறது.