திருகோணமலையில் தியாக தீபம் திலீபனது நினைவேந்தல்: வழக்கு தொடுத்த இனவாத பௌத்த பிக்குகள்
திருகோணமலை சிவன் கோயிலடியில் தியாக தீபம் திலீபனது நினைவேந்தலை மேற்கொண்டவர்கள் மீது பிக்குகள் வழக்கு தொடுத்துள்ளனர்.
19.08.2023 தியாக தீபம் திலீபனது நினைவேந்தல் திருக்கோணமலை சிவன் கோயில் முன்றலில் திருக்கோணமலை சிவில் செயற்பாட்டார்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.
இதன்போது செல்வராஜா கஜேந்திரன் மற்றும் நடராஜா காண்டீபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
பௌத்தப்பிக்குகளால் முறைப்பாடு
இந்நிலையில் இன்றைய தினம் (20.09.2023) திருக்கோணமலை பிரதான காவல்துறை நிலையத்தில் கோகன்னபுரம் பாதுகாப்பு ஒன்றியம் என்ற இனவாத பௌத்தப்பிக்குகளால் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர்கள் நேற்றைய தினம் கிழக்கு மாகாண ஆளுநர் ஒரு தமிழர் என்ற அடிப்படையில் அவரை பதவியில் இருந்து நீக்க கோரி 100000 கையெழுத்து பெரும் நடவடிக்கையை திருக்கோணமலையில் மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சட்டங்களின் அடிப்படையிலும், மனித உரிமை சட்டங்களின் அடிப்படையிலும் இறந்தவர்களை நினைவு கூறும் உரிமை ஒரு அடிப்படை உரிமையாக மக்களுக்கு காணப்படும் நிலையில், இவ்வாறான சம்பவங்கள் தமிழ் மக்களின் நினைவு கூறும் உரிமையை ஒடுக்கி அடக்குவதாக காணப்படுவதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ்விடயம் தொடர்பில், மனித உரிமை ஆணைக்குழு மற்றும் தூதரகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.