வடக்கு மக்களிடம் ஆளுநர் விடுத்த கோரிக்கை
வடக்கு மாகாணத்தை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்ற அனைவரும் ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும் என வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறையில் இடம்பெற்ற பண்பாட்டு விழாவில் இன்று (11.12.2024) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர், “எமது மாகாணத்தின் இளையோர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.
மாகாணத்தின் அபிவிருத்தி
அவர்களுக்கான வேலை வாய்ப்புக்களை நாம் எமது மாகாணத்தில் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அதற்கு முதலீடுகளை இங்கு ஊக்குவிக்கவேண்டும்.
நான் யாழ். மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சிலர் வந்தார்கள். ஆனால் அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள்.
அவர்களிடம் கேட்டபோது, முதலீடுகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் கையூட்டு எதிர்பார்க்கின்றார்கள் என்று கூறினார்கள். அது அன்றைய நிலைமை.
ஆனால் தற்போதைய அரசாங்கம் அவற்றுக்கு முற்றிலும் எதிரானது. பல முதலீட்டாளர்கள் இங்கு வருவதற்கு விரும்புகின்றார்கள். அவர்களை நாங்கள் வரவேற்கவேண்டும்.
எமது உள்ளூராட்சி மன்றங்கள் முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் செயற்படவேண்டும். அவர்களை அலைக்கழிக்கக்கூடாது.
எமது மாகாணத்தை நாம் அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்றும் இலக்கை நோக்கிப் பயணிக்க அனைவரும் ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |