பொருளாதார நெருக்கடியில் நாடு -சுதந்திர தினநிகழ்வுக்கு செலவான பெருந்தொகைப்பணம்
நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் இந்த ஆண்டு 74 வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக அரசாங்கம் சுமார் 95 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.
கடந்த 5 ஆண்டுகளில் சுதந்திர தின விழாவுக்கு செலவிடப்பட்ட மிகப்பெரிய தொகை இதுவாகும். அதன்படி கொழும்பு 07, சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற இந்த மாபெரும் கொண்டாட்டத்திற்காக 94.7 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்தத் தகவலின்படி, 2021ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவுக்கு செலவிடப்பட்ட தொகையை விட, இந்த ஆண்டு விழாவுக்கு கிட்டத்தட்ட 15 மில்லியன் ரூபாய் மேலதிகமாக செலவிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
அரச தொழிற்சாலை திணைக்களத்தினால் மேடை அமைப்பதற்கும், கொடிக்கம்பங்களை விநியோகிப்பதற்கும், சிவப்பு கம்பளத்தை வழங்குவதற்கும் செலவிடப்பட்ட 37 மில்லியன் ரூபாவும், கலாசார கண்காட்சி அணிவகுப்பை நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் செலவிடப்பட்ட 19 மில்லியன் ரூபாவும் உள்ளடங்கும்.
மேலும், நடமாடும் கழிவறை வசதிகளுக்காக 15 மில்லியன் ரூபாவும், விருந்தோம்பல் செலவுகளுக்காக 2 மில்லியன் ரூபாயும், டிஜிட்டல் திரைக்கு 1 மில்லியன் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.
மின்சாரத்திற்காக 11 மில்லியன் ரூபாவும், நீர் வசதிக்காக 2 மில்லியன் ரூபாவும், ஒலி அமைப்புகள் மற்றும் கதிரைகளுக்கு 2 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.
தகவல் அறியும் விண்ணப்பம் பெப்ரவரி 7ஆம் திகதி உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.அதற்கான பதில் அமைச்சின் அதிகாரி அபேவர்தனவினால் ஏப்ரல் 20 ஆம் திகதி வழங்கப்பட்டது.
