33 அரச நிறுவனங்களை மூடுவது குறித்த அரசின் தீர்மானம் : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
இலங்கையில் நட்டமடைந்துவரும் 33 அரச நிறுவனங்களை மூடிவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளபோதும் அந்த நிறுவனங்களின் பெயர்களை இதுவரை வெளியிடவில்லை என மக்கள் போராட்ட அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ (Duminda Nagamuwa) தெரிவித்துள்ளார்.
மக்கள் போராட்ட அமைப்பு கொழும்பில் நடத்திய செயதியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில், “33 அரச நிறுவனங்களை மூடிவிட தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) கடந்த அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.
அமைச்சரவை தீர்மானங்கள்
ஆனால் அரசாங்கம் மூடிவிட தீர்மானித்திருக்கும் இந்த 33 அரச நிறுவனங்கள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை நாட்டுக்கு வெளிப்படுத்தவில்லை.
அமைச்சரவையில் 33 அரச நிறுவனங்களை மூடிவிடுவதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றிருந்தால், அந்த 33 நிறுவனங்களும் என்ன என்பதை அனைவரும் தெரிந்திருக்க வேண்டும்.
33 அரச நிறுவனங்களின் பெயர்களை அரசாங்கம் இதுவரை வெளிப்படுத்தாதன் மூலம் இந்த நிறுவனங்கள் என்ன என்பது தொடர்பில் தெரியாமலா அமைச்சரவை இதற்கு அனுமதி வழங்கி இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.
அத்துடன் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போது 33 அரச நிறுவனங்களை மூடிவிடப்போவதாக தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, 9 நிறுவனங்களின் பெயர்களை வெளியிட்டு ஏனைய நிறுவனங்களின் பெயர்களை மறைத்திருக்கிறார்.
அதேநேரம் அரசாங்கம் அறிவித்துள்ள 9 நிறுவனங்களிலும் பிரச்சினைகள் இருக்கின்றன. அதாவது அரசாங்கம் மூடிவிடுவதற்கு தீர்மானித்துள்ள நிறுவங்களில் ஒன்றுதான் லங்கா லாெஜிஸ்டிஸ் என்ட் டெக்னொலஜி நிறுவனமாகும்.
ஊழல் மோசடி குற்றச்சாட்டு
இந்த நிறுவனம் கடந்த காலங்களில் ஆயுத காெடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்ட நிறுவனமாகும்.
இந்நிலையில் அரசாங்கம் இந்த நிறுவனத்தை மூடிவிடும்போது, இந்த நிறுவனத்ததுக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்களையும் அவ்வாறே மறைத்துவிடப்போகிறதா என்ற கேள்வி எங்களுக்கு எழுகிறது.
மேலுமொரு நிறுவனம்தான் கொமன் வெல்ஸ் கேம் அம்பந்தோட்டை லிமிடெட் என்ற நிறுவனமாகும். பாரிய நிதி மோசடி தொடர்பில் இந்த நிறுவனத்துக்கு எதிராக கணக்காய்வு அறிக்கை ஒன்று இருக்கிறது.
தற்போது இந்த நிறவனத்தை மூடிவிடுவதாக இருந்தால் இந்த நிறுவனத்துக்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதில்லையா என கேட்கிறோம்.
அதனால் நட்டமடைந்து வரும் நிறுவனங்கள் என தெரிவித்து அரசாங்கம் மூடிவிடுவதற்கு தீர்மானித்துள்ள நிறுவனங்களுக்கு பாரிய மோசடி குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. இந்த ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களையும் இதன் மூலம் மூடிவிட வேண்டாம் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.
ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களை மறைப்பதற்கு இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை வழங்கப்படவில்லை. அதனால் அரசாங்கத்தின் அவசரத்துக்காக இவ்வாறு செயற்படுவது மக்கள் ஆணைக்கு விரோதமாகும்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
