பேரறிவாளன் தொடர்பில் வெளியான அரசாணை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பேரறிவாளனின் பரோல் வரும் ஜன.24-ம் திகதியுடன் முடியும் நிலையில், 9வது முறையாக மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பேரறிவாளன். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கட்சி சார்பிலும், சில அமைப்புகள் சார்பிலும் பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் சிறுநீரகத் தொற்று, மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்ததைத் தொடர்ந்து, அவருக்கு 1 மாதம் பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.
அவரது உடல்நிலை கருதி மேலும் ஒரு மாதம் பரோல் நீடிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
