சமூக ஊடகங்கள் மூலம் தூண்டப்படும் இனவாதம்...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
போலிச் சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்தி நாட்டிலுள்ள பல்வேறு இனங்கள் மற்றும் மத சமூகங்களுக்கு இடையே பதற்றத்தையும் மோதல் சூழலையும் உருவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் (CID) உளவுத்துறையும் இணைந்து விரிவான விசாரணைகளை ஏற்கனவே தொடங்கியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ச்சியாக நடவடிக்கை
கடந்த 10 ஆண்டுகளில் வெறுப்புப் பேச்சுகளைப் (Hate Speech) பரப்பியமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID) மூலம் ஆறு முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் வெளிப்படுத்தினார்.
இலங்கையில் சமூக ஊடகப் பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ள நிலையில், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள சிலர் போலி சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்கி மக்களிடையே இனவாத மற்றும் மதவாத வெறுப்பை உமிழும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சம்பவங்களை விசாரிக்கும் போது அதிகாரபூர்வ முறைப்பாடுகள் கிடைக்காமை, போலி சமூக ஊடகக் கணக்குகள் வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுகின்றமை மற்றும் தற்போதைய சட்டக் கட்டமைப்பில் உள்ள வரம்புகள் ஆகியவை காவல்துறையினருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளன என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், போலி கணக்குகளுக்குப் பின்னால் இருக்கும் நபர்களைத் துல்லியமாக அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த காவல்துறையினர் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |