செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு குறித்து அரச தரப்பு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காணாமல்போனோர் தொடர்பான உண்மைத்தன்மையைக் கண்டறிவதற்கு அரச தரப்பிலிருந்து முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது தற்போதைய அரசின் முக்கிய நோக்கம் என்று தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அனைத்து மக்களுக்கும் பொதுவான ஜனாதிபதி என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
காணி விடுவிப்பு
வரலாற்றில் முதன்முறையாக இந்த அரசுக்கு வடக்கு மக்களிடமிருந்து பலத்த ஆதரவு கிடைத்துள்ளது எனவும், காணி விடுவிப்பு உள்ளிட்ட பல வழிகளிலும் நல்லிணக்கத்தை எட்டுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மற்றும் தெற்கு என இரு தரப்பிலும் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாது பெற்றோர் இன்றும் கண்ணீர் வடிக்கும் நிலை நீடிக்கின்றது என்று குறிப்பிட்ட நீதி அமைச்சர், அந்த வேதனையைத் தீர்க்க அரசு முன்னுரிமை அளிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “நாங்கள் ஆட்சிக்கு வரும்போது காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தில் போதிய ஆளணி வளம் இருக்கவில்லை. நாம் உடனடியாகப் புதிய ஆட்சேர்ப்புகளைச் செய்து 60 பேரை அதில் இணைத்துள்ளோம்.
ஆயிரம் முறைப்பாடுகள்
இதற்கென வரவு - செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தற்போது தலா மூன்று பேர் கொண்ட 15 விசாரணைப் புலனாய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் நிலுவையிலுள்ள 11 ஆயிரம் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கின்றோம்.
உண்மையை வெளிக்கொணரவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவும் அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது, அதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |