பட்டதாரி ஆசிரியர் நியமன நேர்முகப் பரீட்சைகள் பிற்போடல் : புதிய திகதிகள் அறிவிப்பு
நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதன்படி, அனைத்து மாகாணங்களிலும் இன்று (20) நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த நேர்முகப் பரீட்சைகள் மாத்திரம் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ வெளியிட்டுள்ள அறிவிப்பில், நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் நடைபெறவுள்ள நேர்முகப் பரீட்சைகள் முன்னர் திட்டமிடப்பட்டபடியே நடைபெறும்.
நேர்முகப் பரீட்சை
நவம்பர் 20ஆம் திகதி நடைபெறவிருந்த நேர்முகப் பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் மாகாண அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதியும், வடக்கு, தென், கிழக்கு மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் நவம்பர் 28ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.

மேலும், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் நவம்பர் 29ஆம் திகதியும், மத்திய மாகாணத்திற்கான நேர்முகப் பரீட்சை டிசம்பர் முதலாம் திகதியும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக் கடிதத்துடன் அனுப்பப்பட்ட அறிவிப்புக்கு அமைவாக, பாடசாலைகளுக்கான விருப்பத் தெரிவை உள்ளிடுவதற்கான நிகழ்நிலை (Online) முறைமை தயாரிக்கப்பட்டுள்ளது.
இது நவம்பர் 19ஆம் திகதி முதல் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் Teacher Recruitment Application System என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு
நவம்பர் 19ஆம் திகதியுடன் இந்த நிகழ்நிலை முறைமை காலாவதியாகாது எனவும், விண்ணப்பதாரர்கள் தாம் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படும் நாளின் இரவு 8 மணி வரை இதில் தகவல்களை உள்ளிட முடியும் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
நேர்முகப் பரீட்சைக்குச் செல்லும் நாள் வரையிலும் அழைப்புக் கடிதம் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள், கடந்த 2026.10.30ஆம் திகதி இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட பெயர்ப் பட்டியலில் தமது பெயர் இடம்பெற்றுள்ள பக்கத்தின் பிரதியையும், தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு, நேர்முகப் பரீட்சை நடைபெறும் வளாகத்திலுள்ள காத்திருப்பு அறைக்கு அன்றைய தினம் காலையில் வருகை தர வேண்டும்.

அங்கு காலை 8 மணி முதல் நிகழ்நிலை முறைமையில் நுழைவதற்கான அனுமதியைப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அறிவுறுத்தல்களுக்கு அமைய நிகழ்நிலை முறைமையில் தகவல்களை உள்ளிடும் அதேவேளை, நேர்முகப் பரீட்சை மற்றும் செயன்முறைப் பரீட்சையிலும் விண்ணப்பதாரர்கள் பங்கேற்க முடியும்.
அவ்வாறான விண்ணப்பதாரர்கள் பரீட்சைகளில் பங்கேற்ற பின்னர், அன்றைய தினம் இரவு 8 மணி வரையிலும் காத்திருப்பு அறைக்கு வந்து பாடசாலை விருப்பத் தெரிவு ஆவணங்களைப் பிரதி எடுத்துக் கையளிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களால் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு கல்வி அமைச்சு வருந்துகின்றது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |