நிதி நிறுவனமென்றின் புதிய தலைவர் மீது துப்பாக்கி சூடு..!
கொலன்னாவ மீகொட , வல்பிட்ட கெமுனு மாவத்தையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை மெகொட காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
நிதி நிறுவனம் ஒன்றின் உள்ளக விவகாரம் தொடர்பில் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பத்தரமுல்லையில் உள்ள காப்புறுதி நிறுவனமொன்றின் தலைவராக பொறுப்பேற்கச் சென்ற 62 வயதுடைய தர்ஷன சமரவிக்ரம என்பவர் மீது கடந்த 5ஆம் திகதி மீகொட வல்பிட்ட கெமுனு மாவத்தை பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
சிசிடிவி காட்சி

காலை 6.45 மணியளவில் தனது மகிழுந்தில் செல்லும் போது, கெமுனு மாவத்தைக்கு அருகில் காத்திருந்த இனந்தெரியாத நபர் ஒருவர் மகிழுந்தை நோக்கி துப்பாக்கி சூடு நடாத்தியுள்ளார்.
குறித்த தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் முச்சக்கரவண்டியில் வந்த குழுவோடு தப்பி செல்லும் காணொளி அருகிலிருந்த சிசிடிவி கருவியில் பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் காப்புறுதி நிறுவனம் ஒன்றின் முன்னாள் உபதலைவர் எனவும், அவர் பணிப்புரியும் நிறுவனத்தின் விருப்பத்தின் பிரகாரம் அவரை புதிய தலைவர் பதவிக்கு நியமித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறை விசாரணை

இந்நிலையில் குறித்த காப்புறுதி நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு இந்த நியமனம் தொடர்பில் அதிருப்தி காணப்பட்டதாகவும், அவரது தரப்பை சேர்ந்த சிலரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் காப்புறுதி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் உட்பட மேலும் மூவரை மீகொட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பேருந்து உரிமையாளர், இராணுவத்தில் இருந்து வெளியேறிய இராணுவ வீரர் மற்றும் பேருந்து நடத்துனர் ஒருவரும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.