ஹமாஸ் அமைப்பின் மையங்களை சூறையாடும் பொதுமக்கள்!
ஹமாஸ் அமைப்பின் மையங்களை பொதுமக்கள் சூறையாடி வருவதாக ஹமாஸ் அமைப்புக்கான துணை சுகாதார மந்திரி யூசுப் அபு ரிஷ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த நிலையில், வடக்கு காசா பகுதியில் அமைந்துள்ள பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
இதனால், அந்த மருத்துவமனையில் மருத்துவ சேவை வழங்கப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
ஹமாஸ் அரசு மீது நம்பிக்கை இல்லை
இந்த மருத்துவமனையை இஸ்ரேல் இராணுவ வீரர்கள் நாலாபுறமும் சுற்றி வளைத்துள்ளனர். 400 பேர் சிகிச்சை பெறும் நிலையில், புலம்பெயர்ந்த 20 ஆயிரம் பேர் மருத்துவமனை வளாகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
இந்த நிலையில், காசாவின் கட்டுப்பாட்டை ஹமாஸ் அமைப்பு இழந்து விட்டது. ஹமாஸ் அமைப்பினர் தெற்கு நோக்கி தப்பியோடுகின்றனர். ஹமாஸ் அமைப்பின் மையங்களை பொதுமக்கள் சூறையாடி வருகின்றனர் என துணை சுகாதார மந்திரி யூசுப் அபு ரிஷ் கூறினார்.
எனினும், அதற்கான சான்று எதனையும் அவர் வெளியிடவில்லை.
ஹமாஸ் அமைப்பின் அரசு மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
