திடீர் தாக்குதல்களால் களங்கடிக்கும் ஹமாஸ்! இஸ்ரேல் படையை கருப்பு பைகளில் அனுப்ப நடவடிக்கை
‘காசா நகரை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் இராணுவ வீரர்கள் கருப்பு பைகளில் பிணமாகத்தான் வீடு திரும்புவர்’’ என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகர் முழுவதையும் இஸ்ரேல் இராணுவம் சுற்றி வளைத்துவிட்டதாகவும், யுத்த நிறுத்தத்துக்கு தற்போது வழியே இல்லை என இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் தெரிவித்திருந்தார்.
பதில் தாக்குதல்கள்
ஆனால், காசாவில் யுத்தம் தொடரும் நிலையில் லெபனான் - இஸ்ரேல் எல்லையில் ஈரான் ஆதரவுடன் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேலும், பதிலடி கொடுத்து வருகிறது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த மாதம் 7ஆம் திகதி தாக்குதல் நடத்தியதால், காசா மீது இஸ்ரேல் இராணுவம் போர் தொடுத்தது.
காசாவின் வடக்கு பகுதியில் கடந்த 7ஆம் திகதி முதல் வான்வழித் தாக்குதலை நடத்திய இஸ்ரேல், தற்போது தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.
போர் குற்றத்துக்கு ஈடான செயல்
காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் இரண்டு நாட்களில் இரு முறை நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இது போர் குற்றத்துக்கு ஈடான செயல் என ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் இதுவரை 3,760குழந்தைகள் உட்பட 9,061 பேர் உயிரிழந்ததாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.