நுவரெலியாவில் 30 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கையளிப்பு
நுவரெலியா - நானுஓயா, கிளாரண்டன் தோட்டத்தில் தற்காலிக குடில்களில் வசித்த குடும்பங்களுக்கு நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமானால் இன்று (18) தனி வீடுகள் வழங்கி வைக்கப்பட்டன.
குடிநீர், மின்சாரம், உட்கட்டமைப்பு உட்பட சகல வசதிகளுடன் கூடிய குறித்த வீடுகளுடன் அவர்களுக்கு பிரத்தியேக 'முகவரி' வழங்கப்பட்டு, வீடுகளுக்கு முன் வைப்பதற்கான கடித பெட்டியும் வழங்கப்பட்டது.
முழுமைப்படுத்தப்பட்ட வீடுகள்
நானுஓயா, கிளாரண்டன் தோட்டத்தில் தற்காலிக குடில்களில் வாழ்ந்து வந்த 30 குடும்பங்களுக்கு தனி வீடுகளை அமைப்பதற்கான வேலைத்திட்டம் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு ஊடாக முன்னெடுக்கப்பட்டது.
கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட வீட்டு திட்டங்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. எனினும், முழுமைப்படுத்தப்பட்ட வீடுகளே மக்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய குடிநீர், மின்சாரம், வீதி உட்பட சகல உட்கட்மைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இதன்பிரகாரம் முழுமைப்படுத்தப்பட்ட வீட்டு திட்டமே இன்று கையளிக்கப்பட்டது.
பலர் கலந்து கொண்டனர்
குறித்த நிகழ்வானது அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், இ.தொ.காவின் பிரதி தவிசாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ராஜதுரை, இ.தொ.காவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பி. சக்திவேல், பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவரும், இ.தொ.காவின் உப தலைவருமான பாரத் அருள்சாமி, உப தலைவர் பிலிப், முன்னாள் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், மக்கள் என பெருமாளனோர் பங்கேற்றிருந்தனர்.
அத்துடன், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உட்பட அரச அதிகாரிகளும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |