இந்தியப் பிரதமருக்கு கூட்டாக கடிதம் அனுப்ப தமிழ் தேசியக் கட்சிகள் உடன்பாடு
வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள பேரினவாத சக்திகளினால் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்புக்கள், குடியேற்றங்கள் ஆகியவற்றிற்கு எதிராகவே எதிர்வரும் 20 ஆம் திகதி பொது முடக்க போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ் கட்சிகள் அறிவித்துள்ளன.
அதேநேரம், சிறிலங்கா நீதித்துறை மீதான அழுத்தங்களுக்கு எதிராகவும் இடம்பெறும் இந்த பொது முடக்க போராட்டத்திற்கான செயற்பாட்டு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஈபி.ஆர்எல்.எவ். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
பொது முடக்க போராட்டம்
அத்துடன், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புடன் கடிதம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் இன்று மாலை இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் அவர் இதனைக் கூறினார்.
முன்னாயத்த கலந்துரையாடல்
வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்க போராட்டத்திற்கான முன்னாயத்த கலந்துரையாடல் இன்று மாலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிறீகாந்தா, செயலாளர் சிவாஜிலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்