வடக்கு,கிழக்கில் ஹர்த்தால் : பொதுபாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு
முல்லைத்தீவில் இளைஞன் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுகளின்படி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (15) ஹர்த்தால் நடத்துவது பயனற்ற செயல் என பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) சமீபத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் இன்று ஹர்த்தால் நடத்தப்படும் என்று அறிவித்தது.
ஹர்த்தால் நடத்துவதற்கு எந்த காரணமும் இல்லை
இது தொடர்பாக கொழும்பு ஊடகமொன்றிடம் பேசிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலா, ஹர்த்தால் நடத்துவதற்கு எந்த காரணமும் இல்லை என்று கூறினார்.
“ஹர்த்தால் நடத்தப்படும் என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் அதை நடத்த எந்த காரணமும் இல்லை. சம்பந்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டள்ளனர். ஹர்த்தால் நடந்தாலும் இல்லாவிட்டாலும், எங்களுக்கு வேறு எதுவும் செய்யத் தேவையில்லை. நீதிமன்ற உத்தரவுகளின்படி நாங்கள் அடுத்த நடவடிக்கை எடுப்போம். ஹர்த்தால் நடத்துவது பயனற்ற செயல்.”
பாரபட்சமற்ற காவல்துறையின் செயற்பாடு
மேலும், இதேபோன்ற சம்பவங்கள் மற்ற மாகாணங்களிலும் நிகழ்கின்றன என்றும், ஆனால் அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் ஹர்த்தால்களை நடத்துவதில்லை என்றும் அவர் கூறினார்.
"இந்த சம்பவங்களை இனம் அல்லது மதத்தின் பார்வையில் இருந்து நாம் பார்க்கக்கூடாது. ஒரு குற்றம் நடக்கும்போது, பொறுப்பான எவருக்கும் எதிராக, அவர்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல் காவல்துறையினர் செயல்படுகிறார்கள். கடந்த சில மாதங்களாக இதை நடைமுறையில் நிரூபித்துள்ளோம்'' என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
