ஊழல் நிறைந்த அரசாங்கமாக மாறியுள்ளது - இராதாகிருஸ்ணன் குற்றச்சாட்டு
தற்போதைய அரசாங்கத்தில் ஊழலும் லஞ்சமும் நிறைந்து போயுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தலைமை தாங்கி உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
மலையக மக்கள் முன்னணி எப்போதும் வடக்கு கிழக்குடன் சுமூகமான தொடர்பை கொண்டுள்ளது. அதனடிப்படையிலேயே இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை அழைத்திருந்தோம். ஆனால் அவர் தவிர்க்க முடியாத காரணத்தினால் வரவில்லை. அதேபோன்று தான் ஹரின் பெர்ணான்டோவும் வரவில்லை.
கடந்த தேர்தலில் இளைஞர்களே அதிகளவில் ஆதிக்கம் செலுத்தினர். மலையகத்திலும் ஒரு ஜீவனுக்கு இளைஞர்கள் வாக்களித்தனர். மறுபக்கத்தில் மற்றுமொரு யுவதிக்கும் 7000ஆயிரம் வாக்குகள் வரை கிடைத்தது. ஆனால் அவை அனைத்தும் இன்று வெற்று வேட்டாக போயுள்ளது.
தற்போதைய அரசாங்கம் பல விடயங்களில் சிக்கியுள்ளது. எல்லாவற்றிலும் ஊழலும்இ லஞ்சமும் நிறைந்துள்ளது. அதேபோல் எல்லாவற்றிலும் கலப்படம் உள்ளது.தேங்கா எண்ணை போன்றவற்றிலும் கலப்படம் நிறைந்துள்ளது. சீனியில் ஊழல், பருப்பில் ஊழல் என அனைத்திலும் ஊழல் கலந்துள்ளது.
தற்போது எமது கடல் வளத்தை மூடி சீனாவுக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நாட்டை விற்கும் செயற்பாடு எங்கு முடியப்போகின்றது என தெரியவில்லை. சஜித்தின் தோல்விக்கு உட்கட்சி மோதலும் முக்கியமானது. அதன் பிறகுதான் சிறுபான்மை மக்களையும் இணைத்து ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டுள்ளது.
முன்னர் ஆட்சி பீடம் ஏறும் தரப்பினரை தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மையினர் காணப்பட்டனர். ஆனால் இன்று சிறுபான்மையினர் துவேசம் மூலம் நசுக்கப்பட்டு வருகின்றனர். இப்போது உளுந்துஇ பாசிப்பயறு உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியாதுள்ளது. இதனால் இன்று உளுந்து வடை, தோசை, சூசியம் போன்ற திண்பண்டங்களை சாப்பிட முடியாதுள்ளது.
இன்றும் 1000 ரூபா சம்பளத்தை முழுமையாக சிலர் பெற்றுக்கொள்ளவில்லை. முக்கியமாக அரசாங்க தோட்டங்களில் 1000 ரூபா அதிகரிப்பு கொடுக்கப்படவில்லை. இன்று எல்லா சலுகைகளும் இல்லாது போயுள்ளது. தற்போதைய நிலையில் 1000 ரூபாவைக்கொண்டு உளுந்தை கூட வாங்க முடியாது. எனவே எமது இளைஞர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.