நாட்டு மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் குறித்து கவனமான இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த அறிகுறிகள் குழந்தைகள் மத்தியில் அதிகமாகக் காணப்படுவதாகவும், எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளை உன்னிப்பாக அவதானிக்குமாறு அறிவுறுத்தப்படுவதாக கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் (Lady Ridgeway Hospital ) குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா (Dr Deepal Perera) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வழக்கமாக நவம்பர் முதல் பெப்ரவரி வரை மற்றும் ஏப்ரல் முதல் ஜூலை வரை காய்ச்சலின் இரண்டு உச்சநிலைகள் உள்ளன.
தொற்றாளர்களின் எண்ணிக்கை
இந்த நேரத்தில், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியிலும் தொற்றுகள் கணிசமாக உயர்ந்துள்ளன.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளன. தற்போதைய நிலவரப்படி, இன்புளூயன்சா A முதன்மையானது.
இருப்பினும், இன்புளூயன்சா B (Influenza) யும் பரவலாக உள்ளது. இந்த நிலைமையின் இது தொடர்பான அறிகுறிகள் தொடர்ந்தால், உடனடி மருத்துவ உதவியை நாடுவதே சிறந்தது.
இன்புளூயன்சா
இன்புளூயன்சா போன்ற நோய்களால் பாதிக்கப்படக்கூடிய குழுக்களில் கர்ப்பிணித் தாய்மார்கள், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் அடங்குவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு, ராகம, களுபோவில, நீர்கொழும்பு வைத்தியசாலைகள், லேடி ரிட்ஜ்வே சிறுவர்களுக்கான வைத்தியசாலை மற்றும் தொற்று நோய் வைத்தியசாலை உட்பட 20 வைத்தியசாலைகளில் இன்புளூயன்சா போன்ற நோய் கண்காணிப்பை அதிகரிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் தேசிய காய்ச்சல் நிலையத்திற்கு முன்னர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |