சிறந்த தடுப்பூசி எதுவென்று தெரிவு செய்ய முடியாது - சுகாதார அமைச்சர் அறிவிப்பு
தடுப்பூசிகளின் தரம் குறித்து இறுதியாக்கப்பட்ட தரவுகள் என எதுவுமே இல்லை. அனைத்துமே தற்போதும் ஆய்வுகளுக்கு உற்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் எது சிறந்த தடுப்பூசியென ஒன்றை தெரிவுசெய்ய முடியாது என்று சுகாதரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
27/ 2 இன் கீழ் எதிர்க்கட்சி தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை பதில் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
கடந்த வாரத்தில் தெற்காசிய வலயத்தில் மீண்டும் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரிப்பு நிலையொன்றே காணப்படுகின்றது.
அதேபோல் இலங்கையிலும் வைரஸ் தொற்றாளர் அதிகரிப்பை காட்டுகின்றது. கடந்த வாரத்தில் இருந்து மீண்டும் இரண்டாயிரத்தை தாண்டிய வைரஸ் தொற்றாளர்கள் நாளாந்தம் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
ஆனால் எப்போது இன்னொரு வைரஸ் அலை உருவாகும் என கூறமுடியாது. தடுப்பூசி ஏற்றிக்கொள்வதன் மூலமாக மட்டுமே கொரோனா அலை ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
நாட்டிற்குள் பரவிக்கொண்டுள்ள சகல விதமான கொவிட் வைரஸ்களுக்கும் தற்போது நாம் பயன்படுத்தும் சகல தடுப்பூசிகளும் வெற்றிகரமாக செயற்படுகின்றது என்பது சுகாதார நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தடுப்பூசிகளின் தரம் குறித்து இறுதியாக்கப்பட்ட தரவுகள் என எதுவுமே இல்லை. அனைத்துமே தற்போதும் ஆய்வுகளுக்கு உற்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் இது சிறந்தது என்ற ஒன்றை தெரிவுசெய்ய முடியாது. ஆனால் இலங்கையில் பரவிக்கொண்டுள்ள சகல விதமான கொரோனா வைரஸ் தொற்றுகளுக்கும் நாம் நாட்டில் பயன்படுத்தும் தடுப்பூசிகள் உகந்தது என தெரிவிக்க முடியும்.
அதுமட்டுமல்ல நாட்டில் தற்போது நாம் தளர்வுகளை கையாண்டுள்ளோம் என்பதற்காக சுகாதார வழிமுறைகளையும் தளர்த்தியுள்ளோம் என அர்த்தப்படாது. தொடர்ந்தும் மக்கள் சுகாதார வழிமுறைகளை கையாண்டு பாதுகாப்புகளை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.