தரமற்ற மருந்து விநியோகம் : சபையில் தெளிவுபடுத்திய சுகாதார அமைச்சர்
தரமற்ற மருந்துகள் அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பினால் வழங்கப்படவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
நேற்றைய (06) நாடாளுமன்ற அமர்வில் தரமற்ற மருந்துகள் தொடர்பாக நேற்று முன்தினம் (05) ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து எதிர்க்கட்சியின் பிரதான இணைப்பாளர் கயந்த கருணாதிலக (Gayantha Karunathilaka) முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்; "அரச வைத்தியசாலைகளுக்கு 500 தரமற்ற மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானவை. தவறான செய்திகளை சமூகமயப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு உரிய தரப்பினரிடம் கேட்டுக் கொள்கிறோம்.
மருந்து விநியோகம்
தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் (NMRA) பதிவு செய்யப்பட்ட மருந்துகள் தான் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை ஊடாக விநியோகிக்கப்படுகின்றன.
தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் வினைத்திறனற்ற நிலை காணப்படுகின்றது. தற்காலிக மற்றும் நிரந்தரப் பதிவுகள் தற்போது விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன.
சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை
500 தரமற்ற மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது, ஆனால் அது எவ்வகையான மருந்துகள் என்று வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை. ஆகவே தாம் பெற்றுக் கொள்ளும் மருந்து தரமற்றதா என்று பொது மக்கள் சந்தேகம் கொள்ள நேரிடும்.
ஆனால் அவ்வாறு கூறும் விதமாக தரமற்ற மருந்துகள் அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பின் ஊடாக செல்லவில்லை. தரத்தின் தன்மை தொடர்பாக பிரச்சினை இருப்பின் அது அறிவிக்கப்படும்.
இது தொடர்பாக எதிர்காலத்தில் விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதாக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெளிவுபடுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |