அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை..! 28 மில்லியன் டொலர் பயன்படுத்தப்பட்டுள்ளது - கெஹலிய சுட்டிக்காட்டு
சீனா வழங்கிய 28 மில்லியன் டொலர் மானியம் 14 வகையான அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அண்மையில் (24) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு நிலவுவதாக பரப்பப்படும் தகவல்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“வதந்திகள் போல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை.
200 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு

சுகாதாரத் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியக் கடனில் இருந்து 200 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய கடன் மூலம் பெறப்பட்ட 1 பில்லியன் டொலர்களில் எஞ்சிய 35 மில்லியன் டொலர்களை ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்தும் குழுவின் கவனத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துரைத்திருந்தனர்.
தனியார் வைத்தியசாலை

மேலும், அரச வைத்தியசாலைகளை உரிய முறையில் பராமரித்து தேவையான வைத்திய உபகரணங்களை வழங்க தவறியமையினால் நோயாளர்கள் தனியார் வைத்தியசாலைகளை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என சிலர் தெரிவித்திருந்தனர்.
ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள். தற்போதைய பொருளாதாரத்தில் நடுத்தர வருமான பிரிவினரால் தனியார் வைத்தியசாலை வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாது.
எதிர்காலத்தில் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை 25% - 30% வரை அதிகரிக்கும்.
மருத்துவ ஊழியர் இடமாற்றம்

தொழிநுட்ப மருத்துவ ஊழியர்களின் இடமாற்றம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
தொழில்நுட்ப மருத்துவ ஊழியர்கள் தங்கள் கிராமங்களில் இருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளில் பணிபுரிந்து வருவதால், குறிப்பாக பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் அவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது
இது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்”.என இதன்போது தெரிவித்திருந்தார்.