வைத்தியர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு விதிக்கும் நிபந்தனை
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் வைத்தியர்கள் நாடு திரும்பாத நிலையில், சில நிபந்தனைகளை விதிக்க ஸ்ரீலங்கா சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
வைத்தியர்களின் வெளியேற்றம் தொடர்பில் ஸ்ரீலங்கா அரவைத்திய அதிகாரிகள் சங்கம் அதிருப்தி வெளியிட்டு வரும் நிலையில் சுகாதார அமைச்சு கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது ,
விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்
இலங்கையிலிருந்து சில கட்டுப்பாடுகளின் கீழ் வைத்தியர்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அனுமதி வழங்குவதற்கு ஸ்ரீலங்கா சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, விடுமுறைக்கான காரணம், விடுமுறையில் செல்லும் காலப்பகுதி மற்றும் அவ்வாறு விடுமுறை பெற்ற வைத்தியருக்கான மாற்றீடு என்பன தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சில துறைகளில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறை மற்றும் வெளிநாடுகளுக்கு சென்ற வைத்தியர்கள் மீள நாடு திரும்பாமை உள்ளிட்ட காரணங்களினால் வைத்தியசாலைகள் சிலவற்றின் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையிலேயே சுகாதார அமைச்சு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக
இதேவேளை, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக வைத்தியர் அஜித் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சரத் லியனகே, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகியமையை அடுத்து இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
