ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை - பிரான்ஸில் 70 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
ஐரோப்பாவில் கடும் வெம்மை
வெப்ப அலைத் தாக்கத்தால் பாரிஸிலுள்ள குளிர்விக்கக்கூடிய பொது இடங்களை இன்று நள்ளிரவு வரை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பிரான்ஸ் முழுவதும் வெப்பம் நிலவும் எனவும், அதிகபட்சமாக 42 பாகை செல்ஸியஸ் வெப்பம் அல்லது அதற்கும் மேல் வெப்பம் பதிவாகும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
70 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
70 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 14 மாவட்டங்களுக்கு வெப்பம் தொடர்பான ‘சிவப்பு’ எச்சரிக்கையும், மீதமான 56 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இல் து பிரான்சின் அனைத்து மாவட்டங்களும் செம்மஞ்சள் வகைப்படுத்தப்பட்ட எச்சரிக்கை வலயங்களுக்குள் அடங்குகின்றன.
இந்த நிலையில் பாரிசில் உள்ள பல பூங்காக்கள், தோட்டங்கள், நீச்சல் தடாகங்கள், குளியல் வசதிகள் போன்றவை நள்ளிரவு வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு சிறப்பு பாதுகாப்பு
வீதிகளில் நேரத்தை செலவிடும் மக்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன், செயற்கை நீரூற்று போன்றவை நீண்ட நேரம் இயங்கவுள்ளன. அத்துடன், பொதுமக்கள் அவசர தேவைக்காக தொடர்பு கொள்வதற்காக அவசர இலக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிரித்தானியாவிலும் அதிகரித்த வெப்பம் நிலவி வருகின்றது.
ஸ்பெயினில் காட்டுத் தீ
ஸ்பெயினில் அதிக வெப்பம் காரணமாக காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனால் 7 ஆயிரம் ஹெக்டெயர் நிலப்பரப்பு தீக்கிரையானதுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஸ்பெயினில் நேற்றைய தினம் 35 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவான நிலையில் அது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வெப்ப அலையால் பலர் உடல் ஒவ்வாமைக்கு உள்ளகி வருவதாக வைத்திசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
