ஐரோப்பாவை வாட்டும் அக்னி வெம்மை - பல பிராந்தியங்களில் சிவப்பு எச்சரிக்கை
ஐரோப்பாவில் மீண்டும் கடும் வெப்பநிலை
உலகின் காலநிலை மாற்றம் அடிக்கடி தீவிர வானிலை நிகழ்வுகளை கொண்டுவரும் என்பதற்குரிய புதிய அறிகுறியாக ஐரோப்பாவில் மீண்டும் கடும் வெப்பநிலை பரவிவருகிறது.
ஐபீரிய பிராந்தியத்தில் இருந்து எழுந்த இந்த வெப்ப அலை இந்த வார ஆரம்பத்தில் ஸ்பெயினை தாக்கிய பின்னர், பிரான்சுக்கு நகர்ந்தது.
இதனால் பிரான்சில் இதுவரை யூன் மாதத்தில் பதிவு செய்யப்படாத அளவுக்கு வெப்ப அலை உயர்ந்துள்ளது. இதனால் அங்கு இன்று பிற்பகல் 2 மணி முதல் பன்னிரெண்டு பிராந்தியங்களுக்கு வெப்ப அலை குறித்த சிவப்பு எச்சரிக்கை நிலை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, 25 பிராந்தியங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை நிலை விடுக்கப்பட்டுள்ளது.
25 பிராந்தியங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை நிலை
நேற்று பிரான்சில் அதியுச்ச வெப்பமாக 40 பாகை செல்சியல் பதிவாகியுள்ள நிலையில், நாட்டின் மூன்றில் ஒரு பகுதியில் உள்ள 18 மில்லியன் மக்கள் வெப்ப அலை பாதிப்பை தற்போது எதிர்நோக்கியுள்ளனர்.
பிரித்தானியாவை பொறுத்தவரை இன்று லண்டனில் 33 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜேர்மனியிலும் வெப்பம் உச்சம் அடையும் என் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தமுறை, வழக்கத்தை விட முன்னதாகவே யூன் மாதத்திலேயே உருவான இந்த அலை மேற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளை கடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
