மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை! மக்கள் பெரும் பாதிப்பு
வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாகப் பெய்து வருகின்றது.
இதனால் மாவட்டத்திலுள்ள தாழ் நிலங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன், அவ்வாறு தேங்கியுள்ள வெள்ளநீர் முறையான வடிகானின்றி வழிந்தோட முடியாதுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கிராமங்களின் உள் வீதிகளில் இவ்வாறு வெள்ள நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களும், மாணவர்களும் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், இந்த நிலைமையால் தொற்றுக்கள் ஏற்படும் அபாயம் நிலவுவதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
1809.5 மில்லி மீற்றர் மழை விழ்ச்சி
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் ஆரம்பத்திலிருந்து இதுவரையில் 1809.5 மில்லி மீற்றர் மழை விழ்ச்சி பதிவாகியுள்ளது.
இன்று (19.12.2025) காலை 8.30 மணிவரையில் கடந்த 24 மணித்தியாலங்களில் நவகிரிப் பகுதியில் 19 மில்லி மீற்றர், தும்பங்கேணி பகுதியில் 32 மில்லி மீற்றர், மைலம்பாவெளி பகுதியில் 53.5 மில்லி மீற்றர், கட்டுமுறிவு பகுதியில் 42 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.
இந்நிலையில் மாவட்டத்திலுள்ள பழுகாமம், வெல்லாவெளி, வவுணதீவு, பட்டிப்பளை, களுதாவளை, களுவாஞ்சிகுடி, குருமண்வெளி உள்ளிட்ட பல இடங்களிலுள்ள சிறிய குளங்கள் நிரம்பி வழியும் நிலை காணப்படுவதாக தெரியவருகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


புலம்பெயர்தலின் வழியாக ஈழப் போராட்டத்திற்குத் துணைநின்ற தமிழர்கள்… 8 மணி நேரம் முன்