யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் ஒரு சில பகுதிகளுக்கு இன்று முதல் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை அவ்வப்போதும் மிதமான மழை கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை வானிலை தொடர்பாக அவர் இன்று (04.09.2025) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அறிவிப்பில் மேலும் குறிப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டுக்கான வடகீழ்ப் பருவக்காற்று எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
வடகீழ்ப் பருவக்காற்று மழை
இவ்வாண்டு வடகீழ்ப் பருவக்காற்று மழை சராசரியை அண்மித்ததாகவே காணப்படும். குறிப்பாக 500 மி.மீ. முதல் 600 மி. மீ. இற்கு இடைப்பட்ட அளவிலேயே மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
இவ்வாண்டு 5 க்கு மேற்பட்ட தாழமுக்க நிகழ்வுகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. இதில் நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியிலும் இறுதிப்பகுதியிலும் தோன்றும் தாழமுக்கங்கள் தீவிர தாழமுக்கங்களாகவோ அல்லது புயல்களாகவோ மாறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
அதேபோன்று டிசம்பர் மாதத்தில் தோன்றுகின்ற தாழமுக்கமும் தீவிரமான தாழமுக்கமாக அல்லது புயலாக மாறுவதற்கான வாய்ப்புகளை கொண்டிருக்கின்றது.
வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புகள்
இவ்வாண்டு வடகீழ்ப் பருவக்காற்று காலத்தில் சராசரியை அண்மித்த அல்லது அதற்கு சற்றுக் கூடுதலான மழைவீழ்ச்சி கிடைக்கும் வாய்ப்பு இருந்தாலும் பெருமளவுக்கு மழை நாட்கள் செறிவான மழைவீழ்ச்சியைக் கொண்டதாகவே அமைந்திருக்கும்.
இதனால் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புகள் இம்முறையும் காணப்படுகிறது.
நவம்பர் மாதம் ஐந்தாம் திகதியில் இருந்து நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு இடையிடையில் இவ்வாண்டின் வடகீழ்ப் பருவக்காற்று மழையின் 60 வீதமான மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
ஒக்டோபர் மாதம் 20 ம் திகதிக்கு பின்னர் வடகீழ்ப் பருவக்காற்று மழை படிப்படியாக தீவிரம் பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
